Dec 10, 2008

எனக்குள் ஒரு கனவு

எனக்குள் ஒரு கனவு
மார்ட்டின் லூதர் கிங்
ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை.

நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ அந்தப் பெரும் மனிதன், விடுதலை அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

இந்த முக்கியமான அறிவிப்பு, அநீதித் தீயிலே வெந்து நோகும் கோடிக்கணக்கான நீக்ரோ அடிமைகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் கலங்கரை விளக்காய் அமைந்தது.

இது, நீண்ட இரவின் அடிமைத்தன இருளை அகற்றி விடும் மகிழ்ச்சியான விடிகாலையாய் இருந்தது.

ஆனால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நீக்ரோ இன்னும் விடுதலையாகவில்லை எனும் கொடுமையான உண்மையை நாம் சந்தித்தே தீர வேண்டும்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்ரோவின் வாழ்க்கை, பாகுபாட்டு விலங்குகளாலும், பிரிவினைச் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டு, இன்னும் முடமாகத்தான் இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், நீக்ரோ, ஒரு பொருளாதார வளமை எனும் சமுத்திரத்திற்கு இடையே, ஏழ்மை என்கிற தனித்தீவில் வாழ்ந்து கொன்டிருக்கிறான்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க சமுதாயத்தின் ஒரு மூலையில், நீக்ரோ இன்னமும் தன் சொந்த நாட்டிலேயே தான் ஒர் அகதியாய் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வருந்திக் கொண்டிருக்கிறான்.

எனவே, ஒரு துரதிருஷ்ட நிலையை வெளிப்படுத்திக் காட்ட இங்கு நாம் வந்திருக்கிறோம்.

ஒரு விதத்தில், நாம் ஒரு காசோலையைப் பணமாக்க, இந்த தலைநகருக்கு வந்திருக்கிறோம்.

இந்த குடியரசின் சிற்பிகள் அரசியல் சட்டத்தையும் விடுதலைப் பிரகடணத்தையும் எழுதும் போது, ஒவ்வொரு அமெரிக்கனும் வாரிசாக விளங்கக் கூடிய ஒரு பத்திரத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

இந்த பத்திரம், அனைத்து மனிதர்களுக்குண்டான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சந்தோஷமாய் வாழ்வதற்கான முயற்சி ஆகியவற்றுக்கான உரிமைகளை பறிக்க முடியாத அளவில் உறுதிப் படுத்துகிறது.

ஆனால் வெள்ளையரற்ற மக்களைப் பொறுத்தவரை அமெரிக்கா இந்த பத்திரத்தின்படி நடக்கவில்லை என்பது இன்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இந்த புனிதமான கடமையைச் செயல் படுத்தாமல், நீக்ரோ மக்களுக்கு 'பணமில்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட ' உபயோகமில்லாத காசோலையை கொடுத்திருக்கிறது.

ஆனால், நீதி வங்கி பணமில்லாமல் போண்டியாகிவிட்டது என்பதை நாம் நம்பத் தாயாரில்லை.

இந்நாட்டின் பேரிய தருணங்களான பேழையில், போதிய பணம் இல்லை என்பதை நம்ப மறுக்கிறோம்.

ஆகவே, இந்த காசோலையைப் பணமாக்க, நமக்கு விடுதலையின் செல்வாக்கையும் நீதியின் பாதுகாப்பையும் வேண்டிய பொழுது தரக்கூடிய இந்தக் காசோலையைப் பணமாக்க இங்கு வந்திருக்கிறோம்.

மேலும், இத்தருணத்தின் மிகுந்த அவசரத்தை அமெரிக்காவிற்கு உணர்த்த இந்தப் புனிதமான இடத்திற்கு வந்திருக்கிறோம்.

படிப்படியாய்ச் சரியாகி விடும் என்று போதையிலே ஆழ்வதற்கும், கிடப்பிலே போட்டு விட்டு ஓய்வதற்கும் இது நேரமல்ல.

இருளிலிருந்து எழுவதற்கும், பாகுபாட்டுப் பள்ளத்தாக்கினை, இன நீதியின் ஒளிப் பாதையிலே கொண்டு சேர்ப்பதற்கும், இதுதான் தருணம்.

வாய்ப்புகளின் கதவுகளைக் கடவுளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் திறந்து விட இதுதான் சிறந்த நேரம்.

இன அநீதிகளின் புதைமணலிலிருந்து, நம்முடைய நாட்டினை சகோதரத்துவமெனும் திடமான மலைப்பாறைகளுக்கு இட்டுச் செல்ல இதுவே தருணம்.

இத்தருணத்தின் அவசரத்தை மேலோட்டமாய்ப் பார்ப்பதும் மற்றும் நீக்ரோவின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதும் இந்த தேசத்திற்கு அழிவையே அளிக்கும்.

நியாயமாய் நீக்ரோ உணர்கின்ற இந்த அநீதியின் கொளுத்துகின்ற கோடைகாலம், விடுதலையும் சம உரிமையுமான இளவேனில் காலம் வரும் வரை மாறாது.

1963 ஒரு முடிவல்ல. மாறாக, அது ஒரு தொடக்கம்.

நீக்ரோ தன் மனக் கொந்தளிப்பை வெளியே கொட்டிவிட்டால் சமாதானமாகி விடுவான் என நம்பி, வழக்கம் போல மீண்டும் பழையபடியே திரும்புபவர்களுக்கு ,அதிரவைக்கும் விழிப்பு காத்திருக்கிறது.

நீக்ரோவிற்கு, இந்த மன்ணின் மைந்தனுக்குரிய உரிமைகள் அளிக்கப் படும் வரை ஓய்வும் அமைதியும் அமெரிக்காவில் இருக்காது.

நீதி பிரகாசிக்கும் நாள் வரும் வரை, புரட்சிச் சூறாவளி, இந்த நாட்டின் அடித்தளத்தை உலுக்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால், நீதியின் மாளிகைக்கு இட்டுச்செல்லும் வாயிலில் நிற்கும் நம் மக்களுக்கு, நான் ஒன்று கூறிக் கொள்ள வேண்டும்.

நமக்குரிய இடத்தை அடையும் முயற்சியில், நாம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கலாகாது.

நாம் நம்முடைய சுதந்திர தாகத்தை தணித்து கொள்வதற்காக, மனக்கசப்பினையும் வெறுப்பினையும் பருகத் தேவையில்லை.

நம்முடைய போராட்டத்தை ஓர் உயர்ந்த தளத்தில், மதிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும்.

நம்முடைய ஆக்க பூர்வமான எதிர்ப்பு, வன்முறையாய் இழிந்து போவதை நாம் அனுமதிக்கலாகாது.

மீண்டும் மீண்டும் நம்முடைய ஆன்ம பலத்தினால், ஆள் பலத்தை எதிர்கொண்டு, மாபெரும் உயரத்திற்கு நம்மை நாமே மேலுயர்த்திச் செல்ல வேண்டும்.

நீக்ரோ சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் பிரமிக்கத்தக்க இந்த புதிய இராணுவத்துவம் எல்லா வெள்ளையரையும் நம்ப முடியாத நிலைக்கு நம்மை இட்டுச் செல்லலாகாது. பற்பல வெள்ளையர் சகோதரர்கள் தங்களுடைய சுதந்திரம் நம்முடைய சுதந்திரத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு இங்கு அவர்களின் வருகையே சாட்சி.

நாம் தனியாக நடக்க இயலாது.

நாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, மென்மேலும் முன்னோக்கிச் செல்வோம் என்று நாம் ஆணைமேற்கொள்வோம்.

நாம் இனி திரும்பிச் செல்ல இயலாது.

மனித உரிமையைப் பெரிதும் மதிப்போரிடம் , 'எப்பொழுது நீ திருப்தி அடைவாய் ? ' என்று சிலர் கேட்கிறார்கள்.

பயணக் களைப்பினால் வரண்டு கிடக்கும் நம்முடைய உடல் நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள விடுதியிலும் நகரத்திலுள்ள தங்குமிடங்களிலும் களைப்பாற இடம் கிடக்கும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

சிறு குப்பத்திலிருந்து பெரிய குப்பத்துக்குத் தான் நீக்ரோ செல்லமுடியும் என்கிற விதி மாறும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

மிசிசிப்பியின் நீக்ரோ ஓட்டுப் போட முடியாத நிலையிலும், நியூ யார்க்கின் நீக்ரோ ஓட்டுப் போடுவதற்கு ஒன்றுமில்லாத இல்லாத நிலையிலும் இருக்கும் போது, நம்மால் திருப்தி அடைய முடியாது.

இல்லை, இல்லை, நாம் திருப்தி அடையவில்லை. நீர் பாய்வது போல் நீதி பாயும் வரை, மடை திறந்த வெள்ளமாய் நேர்மை பாயும் வரை நாம் திருப்தி அடைய மாட்டோம்.

உங்களில் சிலர், ஏராளமான சோதனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவில் இங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாமலில்லை.

உங்களில் ஒரு சிலர் அந்தக் குறுகிய அறைகளிலிருந்து நேரே இங்கு வந்திருக்கிறீர்கள்.

உங்களின் சுதந்திர தாகத்தால், தண்டனைப் புயலால் தாக்கப் பட்டும் போலீஸ் அராஜகக் காற்றால் உருட்டப் பட்டும் கூட உங்களில் சிலர் இங்கு வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் நூதனமான துன்பங்களில் உழன்று காய்ப்பேறி இருக்கிறீர்கள்.

தேவையில்லாமல் தேடி வந்த துன்பம், நம்மைக் கடத்தேற்றவல்லது என்ற நம்பிக்கையுடன், தொடருங்கள் உங்கள் உழைப்பை.

திரும்பிச் செல்லுங்கள் மிசிசிப்பிக்கு, திரும்பிச் செல்லுங்கள் அலபாமாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் ஜியார்ஜியாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் லூசியானாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களின் பட்டி தொட்டிகளுக்கு, எப்படியாவது இந்த நிலை மாறியே தீரும், மாற்றியே தீருவோம் என்பதை அறிந்து கொண்டு.

பரிதாபமெனும் பள்ளத்தாக்கிலே, நாம் கிடந்து உருள வேண்டாம்.

இன்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன் நண்பர்களே,! எவ்வளவுதான் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்தாலும் எனக்குள் ஒரு கனவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இது அமெரிக்காவைப் பற்றிய கனவில் மிக ஆழமாய்ப் பதிந்த கனவு.

ஒரு நாள், இந்த தேசம் உயர்ந்து நின்று 'அனைத்து மனிதர்களும் சரிசமமாய் உருவாக்கப்பட்டார்கள் என்பது நிரூபணம் வேண்டாத உண்மையெனப் புரிகிறோம் ' எனும் கொள்கைக்கேற்றபடி வாழுமென, அதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டு விடுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், ஜியார்ஜியாவின் சிவப்பு மலைக்குன்றுகளில் முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமைகளின் எஜமானர்களின் பிள்ளைகளும் ஒரு சகோதரத்துவ மேசையில் சரிசமமாய் உட்கார முடியுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், அநீதியிலும் அடக்குமுறையிலும் வெந்து காய்ந்து பாலைவனமாய் காட்சி அளிக்கும் மிசிசிப்பி மாநிலம், சுதந்திரமும் நீதியும் கொண்ட ஒரு பசுஞ்சோலையாய் மாறிவிடும் என்று எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், எனது நான்கு பிள்ளைகளும் நிறத்தை வைத்து மதிப்பிடாமல் குணத்தை வைத்து மதிப்பிடும் தேசத்தில் வாழப்போகிறார்கள் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

அர்த்தமற்ற வார்த்தைகளை வீணாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் ஆளுனரைக் கொண்ட அலபாமா மாநிலத்தில், கருப்பு சிறுவர் சிறுமியருடன் வெள்ளை சிறுவர் சிறுமியர்கள் ஒன்றாய் கை கோர்த்து சகோதர சகோதரிகளாய் உலவி வரும் மாநிலமாய் ஒரு நாள் மாறிவிடும் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

ஒரு நாள், ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மேம்படுத்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் சரிக்கப்படும், கரடுமுரடான பகுதிகள் சீர்படுத்தப்படும், வளைவுகளும் நெளிவுகளும் நேர் படுத்தப்படும், இறைவனின் பெருமை வெளிப்படுத்தப்படும், எல்லா உயிர்களும் இவற்றை ஒன்றிணைந்து பார்க்கும்.

இதுதான் நமது எதிர்பார்ப்பு.

இந்த நம்பிக்கையுடன் நான் தெற்கே திரும்பிச் செல்கிறேன்.

இந்த நம்பிக்கையுடன் ஒரு பெரிய மலை போன்ற அவநம்பிக்கையிலிருந்து, ஒரு சிறு கல் போன்ற எதிர்பார்ப்பை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த நம்பிக்கையுடன் தாறுமாறாய் காதில் ஒலிக்கும் நமது தேசத்தின் சத்தங்களை இனிமையான சகோதரத்துவ சங்கீதமாய் நம்மால் மாற்ற முடியும்.

இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒன்று கூடி உழைக்க முடியும், ஒன்று கூடி பிரார்த்திக்க முடியும், ஒன்று கூடி கஷ்டங்களை எதிர் நோக்க முடியும், ஒன்று கூடி சிறை செல்ல முடியும், ஒன்று கூடி விடுதலைக்குப் போராட முடியும், என்றாவது ஒரு நாள் விடுதலையாவோம் என்ற தெளிவுடன்.

அந்த நாளிலே, இறைவனின் எல்லாக் குழந்தைகளும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அர்த்தத்துடன் இந்த பாடலை பாட முடியும், 'எனது நாடே, நீ இனிமையான சுதந்திர நாடு, நான் உன்னைப் பற்றிப் பாடுகிறேன். என் தந்தையர் இறந்த நாடு, பக்தர்களின் பெருமை கொண்ட நாடு, ஒவ்வொரு மலைப் பகுதியிலிருந்தும் சுதந்திர ஓசை ஒலிக்கட்டும் '

அமெரிக்கா ஒரு உயர்ந்த தேசமாக வேண்டுமெனில், இது உண்மையாக வேண்டும்.

எனவே, சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ யார்க்கின் பலம் வாய்ந்த மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, பென்சில்வேனியாவின் உயரிய அல்லெஜீனி மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கொலொராடோவின் பனி மூடிய பாறைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கலிபோர்னியாவின் வளைவுகள் கொண்ட முகடுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, டென்னிசியின் ஏறி நின்று பார்க்கக் கூடிய மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, மிசிசிப்பியின் ஒவ்வொரு மலை மற்றும் குன்றிலிருந்தும் ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, ஒவ்வொரு மலைபகுதியிலிருந்தும் ஒலிக்கட்டும்.

நாம் இப்படி சுதந்திர ஓசை ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், பட்டி தொட்டிகளிலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, கடவுளின் எல்லாக் குழந்தைகளும், கருப்பர்களும் வெள்ளையர்களும் உட்பட, யூதர்களும் ஜென்டில்ஸ்களும் உட்பட, புராடஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கர் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து கை கோர்த்துப் பாட முடியும், பழைய நீக்ரோ தெய்வீகப் பாடலை. 'விடுதலை இறுதியில்! விடுதலை இறுதியில்! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, நாம் அனைவருக்கும் இறுதியில் விடுதலை!! '
-----
நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

ஆங்கிலம் பேசுவோர் சர்வதேசவாதிகள்! தமிழ் பேசுவோர் இனவாதிகள்!!" இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம் இப்படியான வெவேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அனுபவங்கள் வேடிக்கையானவை. அந்த விசித்திர அனுபவங்களை அலசுவதன் மூலம் அவர்களின் உலகையும், அதனூடாக எம்மையும் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை 500 வருட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவு. இன்று இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமல்ல, அடித்தட்டு வர்க்கத்தினர் கூட காலனிய மனவுலகில் வாழ்கின்றனர். அல்லது அப்படி வளர்க்கப்படுகின்றனர். பண்டைய காலங்களில் எமது மூதாதையர் எம்மைப்போல சிந்திக்கவில்லை. நான் நாகரீக வளர்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. தன்னிலையுணர்வை, சமூகத்தில் தனது பாத்திரம் பற்றிய வரையறை பற்றியே இங்கே பேசப்படுகின்றது. தமிழர், சிங்களவர் என்ற மொழியை அடிப்படையாக கொண்ட தேசியம் உருவான 20 ம நூற்றாண்டு வரையில், மக்கள் தமது குலத்தை, சாதியை, பிரதேசத்தை, அதற்கும் மேலால் மதத்தை கொண்டு மட்டுமே தம்மை அடையாளப்படுத்தினர். தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனால் வாழும் இடத்தை பொறுத்து தமிழர் சிங்களவராவதும், சிங்களவர் தமிழராவதும் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை.

ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் அப்போது தமது தாயகத்தில் இருந்ததைப் போல நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையையே பின்பற்றியதால், பெருமளவில் குடியேறியிருந்த அவர்களின் இனத்தை சேர்ந்த, அல்லது அவர்களுக்கு விசுவாசமான கலப்பின பறங்கியர் மட்டுமே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பவர்களாக இருந்ததால், உள்நாட்டு மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகக் குறைவே எனலாம். ஆனால் ஆங்கிலேயர் வந்த காலத்தில், உலகில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு மத்திய தர வர்க்கம் தேவைப்பட்டது.

ஒரு சாம்ராஜ்யம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூரில் ஒரு அடிவருடிக் கும்பல் உருவாக வேண்டும். அந்தக் குழுவை சேர்ந்த பிள்ளைகளை சாம்ராஜ்ய தலைநகருக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். ஏகாதிபத்திய கல்வியால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஊர்திரும்பும் புதிய தலைமுறை, சாம்ராஜ்யத்தின் உள்ளூர் முகவர்களாக ஆட்சியை நிர்வகிப்பார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மாபெரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட எகிப்தியர்களும், ரோமர்களும் அறிமுகப்படுத்திய "ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எப்படி?" என்ற பாடத்தை ஆங்கிலேயர்கள் கச்சிதமாக கடைப்பிடித்தனர். உள்நாட்டு நிலச்சுவாந்தர்கள் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்குமளவு பணவசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக இருந்தால் சலுகைகள் கிடைத்தன. ஆட்சியாளரின் ஆங்கிலேய கல்வியை கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது எளிதாக இருந்தது.

இன்று ஆங்கில மோகம் கொண்ட தலைமுறைக்கு மேற்குறிப்பிட்ட சரித்திர சான்றுகள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை சரித்திரம் என்ற ஒன்றே கிடையாது. உலகம் இப்போது உள்ளதைப்போல, அப்போது இருந்தது, அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆங்கிலம் உலக மொழியானது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்று வாதிப்பார்கள், அல்லது மதப்பற்றாளர்கள் என்றால் அதுவே கடவுளின் விருப்பம் என்பர். அந்த வர்க்கத்தை சேர்ந்த படித்து பட்டம் பெற்றோரும், ஆங்கிலமே உலகம் முழுவதும் பேசப்படுவதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது உலகமானது, கடல் கடந்த தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அப்பால் எதுவுமே இல்லை. தப்பித்தவறி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் புகுந்து விட்டால், இந்த மக்கள் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்கள் இல்லை என்று நொந்து கொள்வார்கள். அதே நேரம் ஆங்கிலேயர் தம் நாட்டில் வேறு மொழி பேசப்படாததேன் என்று கேட்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால், எமது "கறுப்பு-ஆங்கிலேயர்கள்", "வெள்ளை-ஆங்கிலேயரை" விட ஒரு படி மேலே போய் விட்டனர்.

நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு தம்மைப் போன்றோர் மட்டுமே உலகில் இருப்பதாக எண்ணம் இருக்கும். அதற்கு காரணம் கலாச்சாரம் அவர்கள் சார்ந்ததாக இருப்பது தான். திரைப்பட கதா மாந்தர்கள் நடுத்தர வர்க்க பிம்பமாக காட்சிதருவர். இலக்கியங்கள் யாவும் எழுதப்படிக்கத் தெரிந்த பிரிவையே சந்தையாக கொண்டிருக்கும். பல படி முறைப்பட்ட சமூகத்தில், அந்தஸ்து என்பது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கும். முதலாளித்துவ கல்விமுறை தமக்கு சேவகம் செய்பவர்களை உருவாகுவதை நோக்கமாக கொண்டது. அதிலும் திறமை கொண்டவர்க்கு அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. இதனால் ஒப்பீட்டளவில் உழைக்கும் வர்க்கத்தை விட மேல்நிலையில் இருக்கும் வசதி கருதி, அதை அடையும் வழி கருதி, கல்வியை ஒரு ஊக்கியாக நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டதில் வியப்பில்லை. அதிலும் ஆங்கில வழிக் கல்விக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்ய ஆங்கிலம் கற்றவர்கள் அவசியம். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூலதனம் குவிந்து கிடப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மதிப்பு அதிகம்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்கிலமே பாடசாலைகளில் போதனா மொழியாக இருந்தது. ஐம்பதுகளில் தேசியவாத சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்து பிரதமரான பண்டாரநாயக்க வந்த பின்னரே மாபெரும் சமூக-கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. சிங்களப்பகுதிகளில் சிங்களமும், தமிழ் பகுதிகளில் தமிழும் போதனாமொழியாகியது. பண்டரநாயக்கவை ஒரு சிங்கள இனவாதியாக பார்க்கும் தமிழர்கள், தமது பிள்ளைகள் தமிழ் கற்க காரணம் யார் என்று சொல்வதில்லை. அதேநேரம் அவரை ஒரு முற்போக்குவாதியாக பார்க்கும் சிங்களவர்கள் இன முரண்பாடுகளின் தோற்றத்தை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் ஏகாதிபத்தியமும் தனது நலன்களை பற்றி மட்டுமே அக்கறைப்பட்டது. கல்வியை தேசிய மொழியாக்குவதும், பொருளாதாரத்தை பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாக புரிந்து கொண்ட சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.

பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்ட திருப்புமுனையின் பின்னர் தான், ஆங்கிலம் பேசுவோர் "சர்வதேசவாதிகள்"(ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதன் நாகரீக வடிவம்) ஆனார்கள். அதேநேரம் தமிழ் பேசுவோர் "இனவாதிகள்" (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதன் புராதன வடிவம்) என வகைப்படுத்தப்பட்டனர். சிங்களவரும், தமிழரும் ஒருவரை ஒருவர் இனவாதிகள் என்று குற்றம் சாட்டுவது வேறு விடயம். நான் இங்கே ஏகாதிபத்திய மேற்பார்வை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இப்போது கூட உள்நாட்டு அரசியல்வாதிகளைப் பரிகசித்துக் கொண்டிருக்கும் இந்த "கறுப்பு-ஆங்கிலேயர்கள்", ஐரோப்பிய வெள்ளையின "தேவர்களின் வருகைக்காக" காத்திருக்கின்றனர். உலகமயமாக்கலும், மறுகாலனியாதிக்க அலையும், அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியது. புதிது புதிதாக கடை விரித்த பன்னாட்டு கம்பனிகளில் தமது ஆங்கிலப் புலமையை காட்டி ஒட்டிக் கொண்டனர். சர்வதேச மூலதனம் அள்ளி வழங்கிய, பணத்தை கண்டு மயங்கினர். இதனால் அவர்களது ஆங்கில மோகமும், அது தந்த செருக்கும் கூடியதே தவிரக் குறையவில்லை. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்கமும், கறுப்பு-ஆங்கிலேயரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச மூலதனமானது, உலகின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் முதலாளிகளை வளர்த்து விடுகின்றது. உள்ளூர் முதலாளிகளைப் பொறுத்தவரை, கடல்கடந்த கனவுகள் இருந்தபோதும், முதலில் உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தவிர்க்கவியலாமல் உள்ளூர் மக்கள் பேசும் தமிழ் மொழி வளர்ச்சியடைகின்றது. ஒரு சரக்கின் விற்பனை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது. அது நகரம் தவிர்ந்த நாட்டுப்புறங்களில் பலருக்குப் புரியாது. அதனால் தான் மூலதனத்தின் வளர்ச்சியினால், தமிழ் மொழியின் வளர்ச்சி(பிற மொழிகளைப் போன்றே) தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளில் ஒன்று.

இருப்பினும் ஊடகங்களின் பெருக்கமானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு துணை போனாலும், அதன் மூலமாக ஆங்கிலம் மறைமுகமாக திணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், திரையுலக பிரபலங்கள் போன்றோர், தமிழுடன் ஆங்கிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து பேசுவதை, இந்த தொலைக்காட்சிகள் அனுமதிக்கின்றன. மேலை நாடுகளில் அப்படி ஒருவர் பேட்டியளித்தால், (உதாரணத்திற்கு பிரெஞ்சு டி.வி.யில் ஒருவர் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பேசினால்) அதனை உப தலைப்புகளுடன் தான் ஒளிபரப்புவார்கள். அதே போன்று எமது தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்யாத காரணம் என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த பாமரனும் ஆங்கிலம் கற்பதற்கான ஏக்கத்தை உருவாக்குவதை தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

நவீன தமிழின் நிலைமையை, நவீன அரபு மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அரபு மொழி, தமிழ் மொழி போல இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழி தான். நவீன அரபு மொழியானது நிறைய ஆங்கில அல்லது பிரெஞ்சு சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து அரபு நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர் அறிமுகப்படுத்திய கல்விமுறையே இன்றுவரையில் போதிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வவ் நாடுகளின் அரசியல்-பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டு, கல்வியின் போதனா மொழி மாறுபடுகின்றது. இரண்டு மாறுபட்ட உதாரணங்களைப் பார்ப்போம். மொரோக்கோவில் உயர்கல்வி முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் போதிக்கப்படுகின்றது. இதனால் சிறுவயதில் இருந்தே பிரெஞ்சு மொழி வழிக் கல்வியை பெற்றுவரும் நடுத்தர வர்க்க மாணவர்கள் இலகுவாக உயர்கல்வி கற்க வாய்ப்பாகின்றது. அதற்கு மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் உழைக்கும் வர்க்க பிள்ளைகள், தாய்மொழியான அரபு மொழியில் கல்வி கற்பதால், உயர்கல்விக்கான வாய்ப்பு தடைப்படுகின்றது. இத்தகைய கல்விமுறை நாட்டில் இரு வர்க்கங்களினதும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றது. பிரெஞ்சு வழிக் கல்வி கற்ற "புத்திசாலிகள்" வசதிபடைத்தோராயும், அரபு வழிக் கல்வி கற்ற "முட்டாள்கள்" வசதியற்ற ஏழைகளாகவும், சமூகத்தில் பார்க்கப்படுவதற்கு பாரபட்சமான கல்விமுறை ஏதுவாகின்றது. அதேநேரம் அசாத் தலைமையில் சோஷலிச மாற்றங்கள் ஏற்பட்ட சிரியாவில், அனைத்துப் பாடங்களும், மருத்துவம் உட்பட, அரபு மொழியிலேயே போதிக்கப்படுகின்றன. இதனால் அனைவரும் கல்விகற்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், அரபுலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடாக சிரியா திகழ்கின்றது.

நம்மவர்கள் அதிகம் மெச்சிக் கொள்ளும் ஐரோப்பிய உதாரணங்களைப் பார்ப்போம். இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பிரபுக்களும் பிரெஞ்சில் கல்வி கற்று பிரெஞ்சு மொழியிலேயே தமக்குள் உரையாடினர். ரஷ்யாவிலும் அது தான் நிலைமையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட ஆங்கில, ரஷ்ய மொழிகள் கல்வியறிவற்ற சாதாரண குடிமக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்தது. என்றைக்கு இங்கிலாந்தில் ஆங்கில மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், போதனா மொழியாகியதோ, அப்போதிருந்து தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியது. இன்று அந்நாடுகளில் மொத்த சனத்தொகையும் எழுத, வாசிக்க தெரிந்து வைத்திருக்கின்றது என்றால், அதற்கு தாய்மொழிக் கல்வியே காரணம்.

நமது நாடுகளில், அந்நிய மொழியை புறக்கணித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கப் படாததன் காரணம், வெளிநாட்டு மூலதனத்தின் கவர்ச்சிக்கு மயங்கும் மக்களும், நவகாலனிய முகவர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் தான். இரண்டாவது வகையினர் அந்நிய கடனுக்கு அடிமையானது கவனிக்கத்தக்கது. தமிழ் நாடு என்று மொழிவாரி மாநில அதிகாரம் கொண்டிருந்தாலும், உலகவங்கி, ஐ.எம்.எப்., போன்றவை தரும் கடனுக்கு கட்டுப்படுவதால், தனியார்மயம் என்ற பதாகையின் கீழ் முளைக்கும் ஆங்கிலவழிப் பாடசாலைகளை தடுக்க முடியாத நிலை. இதுவே நாளைக்கு தமிழ் ஈழம் வந்தாலும் ஏற்படப்போகின்றது. ஒருவகையில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வது கூட, காலனிய எஜமானர்களுக்கும், உலகவங்கிக்கும் விரும்பத்தக்க பலன்களையே தருகின்றது. ஏனெனில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, தாய்மொழிக் கல்விக்கு செலவிடவும், அதேநேரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்கவும் முடியும். மேற்குலக நாடுகள் எல்லாம் அவ்வாறு தான் அபிவிருத்தியடைந்தன. மேற்குலக சீரழிவுகளை இறக்குமதி செய்பவர்கள், அந்நாடுகளில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரசியல்வாதிகள் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே மேற்குலக மோகத்திற்குள் மயங்கிக் கிடக்கின்றனர்.

தமிழ் செம்மொழி என்று பழம் பெருமை பேசுவதாலோ, தமிழ்கலாச்சாரத்தை பாதுகாப்பதாலோ, அல்லது தமிழ் தேசியம் கோலோச்சுவதாலோ, பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது. இங்கிலாந்து கண்ட தொழிற்புரட்சி, ரஷ்யா கண்ட போல்ஷெவிக் புரட்சி, சிரியா கண்ட (முற்போக்கு) இராணுவப்புரட்சி; இவையெல்லாம் பொருளாதார சுதந்திரத்தை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டதால் தான் தமது தாய்மொழியை அரியணையில் அமர்த்த முடிந்தது. வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.

நன்றி:
கலையகம்.

Read more...

கம்பர் படைத்த ஏரெழுபது!

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். கம்பராமாயணத்தைப் போல ஏரெழுபது பிரபலம் அடையாவிடினும்
மிக அருமையான கவிதைகளால் உழவுத்தொழிலின் சிறப்பை சொல்கின்றது.

ஏரெழுபது

பாயிரம்

1. கணபதி வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4

5. சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6

7. வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.


நூல்

1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10

2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11

3. ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12

4. அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15

7. நுகத்தடிச் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17

9. நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18

10. பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19

11. தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20


12. கொழுச் சிறப்பு

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே. 21

13. கொழு ஆணியின் சிறப்பு

செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுநீரா நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே. 22

14. தாற்றுக்கோல் சிறப்பு

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. 23

15. உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 24

16. எருதின் கழுத்துக்கறை சிறப்பு

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே. 25

17. எருது பூட்டுதற் சிறப்பு

ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. 26

18. ஏர் பூட்டலின் சிறப்பு

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே. 27

19. ஏர் ஓட்டுதலின் சிறப்பு

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே. 28

20. உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே. 29

21. உழவின் சிறப்பு

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. 30


22. உழுத சாலின் சிறப்பு

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. 31

23. மண்வெட்டியின் சிறப்பு

மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே. 32

24. வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 33

25. எருவிடுதலின் சிறப்பு

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. 34

26. சேறு செய்தற் சிறப்பு

வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. 35

27. பரம்படித்தலின் சிறப்பு

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்பிடிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. 36

28. வித்திடுதலின் சிறப்பு

பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 37

29. முளைத்திறனின் சிறப்பு

திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 38

30. நாற்றங்காலின் சிறப்பு

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றடைகடலைத் தானன்றோ?
வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. 39

31. நாற்று பறித்தலின் சிறப்பு

வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. 40


32. நாற்று முடி சுமந்த சிறப்பு

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. 41

33. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ? 42

34. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு

வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 43

35. பாங்கான நடவின் சிறப்பு

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே, கற்றாரே! 44

36. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 45

37. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. 46

38. வேளாண்மை முதலாதலின் சிறப்பு

அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. 47

39. பயிர் வளர்திறத்தின் சிறப்பு

சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. 48

40. நாளும் நீர் இறைத்தலின் சிறப்பு

காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 49

41. பாய்ச்சும் நீரின் சிறப்பு

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயர் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 50


42. நிலம் திருத்தலின் சிறப்பு

மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே. 51

43. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு

எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. 52

44. பைங்கூழ்ச் சிறப்பு

கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே. 53

45. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு

கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. 54

46. களை களைதற் சிறப்பு

வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 55

47. கருப்பிடித்தலின் சிறப்பு

திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. 56

48. கதிர் முதிர்தலின் சிறப்பு

ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. 57

49. பசுங் கதிர்ச் சிறப்பு

முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. 58

50. கதிரின் தலைவளைதற் சிறப்பு

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவநயும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. 59

51. சோறிடுஞ் சிறப்பு

அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே. 60


52 அறுவடை கொநடையின் சிறப்பு

அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படிவு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. 61

53. அரி சூட்டின் சிறப்பு

கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேறாதே. 62

54. களம் செய்தலின் சிறப்பு

சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே. 63

55. போர் அடிவலியின் சிறப்பு

கடிசூட்டு மலர்வாளி காமனுடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே. 64

56. அடிகோலின் சிறப்பு

முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டின்மிகுங் கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தமர்ந்து செந்நெற் சூடுமிதித் திடுங்கோலே. 65

57. போர் செய்தற் சிறப்பு

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே. 66

58. போர்க்களப் பாடுதற் சிறப்பு

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. 67

59. இரப்பவரும் தோற்காச் சிறப்பு

பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே. 68

60. போர் செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே. 69

61. எருது மிதித்தலின் சிறப்பு

எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவளரு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே. 70


62. நெற்பொலியின் சிறப்பு

விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 71

63. நெற்குவியலின் சிறப்பு

தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. 72

64. நெற்கூடையின் சிறப்பு

ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்த முயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 73

65. பொலி தூற்றுங் கூடைச் சிறப்பு

வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. 74

66. பொலி கோலின் சிறப்பு

சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 75

67. நெற்கோட்டையின் சிறப்பு

திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. 76

68. கல்லறைச் சிறப்பு

தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல். 77

69. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு

அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. 78

70. நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. 79


---
நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

Dec 8, 2008

தமிழுக்காக

உன்னை வைத்து(நினைத்து) சிலர்

சிலர் அவர்களின் முகங்களை
அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்

சிலர் அவர்களுக்கு தேவையான
ஆதாயம் தேடுகிறார்கள்

சிலர் கட்டாயத்தால் உன்னை
கசக்கி காயப்போடுகிறார்கள்

சிலர் பழமையைச் சொல்லி
பயமுறுத்துகிறார்கள்

சிலர் நீ தோன்றிய காலம்
சொல்லிகலக்கமடைய வைக்கிறார்கள்;

உன்னை விவாதித்து அரசியல் நடக்கிறது
உன்னை விற்று வியாபாரம் நடக்கின்றது

ஆனால் உன் உண்மை உருவை
யாராலும் உணரமுடியவில்லை.

நான் உணர்ந்துவிட்டேன்
பாத்திரம் தகுந்து மாறும் நீரைப் போன்றவள்

பச்சைக் குழந்தை நா முதல்பாழும் கிழவன் நா வரை
பக்குவமாக பவனிவரும்பட்டாம்பூச்சி நீ

தோன்றிய நாள்முதல்நிலை
மாறாமல் இருக்கும் கல் அல்ல- நீ
கல்லை சிற்பமாக மாற்றி
உயிரூட்டும் உன்னத படைப்பாளி - நீ

அன்று கற் குகையில் வாழ்ந்தான்
அவனுக்குக் கடினமாக இருந்தாய்.
இன்று கணிணியுகத்தில் வாழ்கிறான்
அதனால் நவீனமாக நளினமாக இருக்கிறாய்.

இதில் வியப்பதற்கும் ஒன்றுமில்லை
அதில் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை

உருவம் மாறியதால் உருக்குலையவில்லை
பெரிய கடல் ஆவியாகி பின் மழைத்துளியாய்
மண்ணில் விழுந்து மனிதனை உயிர்காப்பதுபோல்
நீயும் உன்னை உருமாற்றி ஒலி மாற்றி
மனதை உணரவைக்கிறாய்

-
கோவையிலிருந்து
மு.சரளா

-------------------------------------------------------------------------------
விவாதியின் வாசகி மு.சரளா இந்தியாவிலிருந்து அனுப்பிய கவிதை இது.!
வாசகர்கள் தங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
tamildebate@gmail.com

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP