Dec 10, 2008

எனக்குள் ஒரு கனவு

எனக்குள் ஒரு கனவு
மார்ட்டின் லூதர் கிங்
ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை.

நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ அந்தப் பெரும் மனிதன், விடுதலை அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

இந்த முக்கியமான அறிவிப்பு, அநீதித் தீயிலே வெந்து நோகும் கோடிக்கணக்கான நீக்ரோ அடிமைகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் கலங்கரை விளக்காய் அமைந்தது.

இது, நீண்ட இரவின் அடிமைத்தன இருளை அகற்றி விடும் மகிழ்ச்சியான விடிகாலையாய் இருந்தது.

ஆனால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நீக்ரோ இன்னும் விடுதலையாகவில்லை எனும் கொடுமையான உண்மையை நாம் சந்தித்தே தீர வேண்டும்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்ரோவின் வாழ்க்கை, பாகுபாட்டு விலங்குகளாலும், பிரிவினைச் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டு, இன்னும் முடமாகத்தான் இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், நீக்ரோ, ஒரு பொருளாதார வளமை எனும் சமுத்திரத்திற்கு இடையே, ஏழ்மை என்கிற தனித்தீவில் வாழ்ந்து கொன்டிருக்கிறான்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க சமுதாயத்தின் ஒரு மூலையில், நீக்ரோ இன்னமும் தன் சொந்த நாட்டிலேயே தான் ஒர் அகதியாய் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வருந்திக் கொண்டிருக்கிறான்.

எனவே, ஒரு துரதிருஷ்ட நிலையை வெளிப்படுத்திக் காட்ட இங்கு நாம் வந்திருக்கிறோம்.

ஒரு விதத்தில், நாம் ஒரு காசோலையைப் பணமாக்க, இந்த தலைநகருக்கு வந்திருக்கிறோம்.

இந்த குடியரசின் சிற்பிகள் அரசியல் சட்டத்தையும் விடுதலைப் பிரகடணத்தையும் எழுதும் போது, ஒவ்வொரு அமெரிக்கனும் வாரிசாக விளங்கக் கூடிய ஒரு பத்திரத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

இந்த பத்திரம், அனைத்து மனிதர்களுக்குண்டான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சந்தோஷமாய் வாழ்வதற்கான முயற்சி ஆகியவற்றுக்கான உரிமைகளை பறிக்க முடியாத அளவில் உறுதிப் படுத்துகிறது.

ஆனால் வெள்ளையரற்ற மக்களைப் பொறுத்தவரை அமெரிக்கா இந்த பத்திரத்தின்படி நடக்கவில்லை என்பது இன்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இந்த புனிதமான கடமையைச் செயல் படுத்தாமல், நீக்ரோ மக்களுக்கு 'பணமில்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட ' உபயோகமில்லாத காசோலையை கொடுத்திருக்கிறது.

ஆனால், நீதி வங்கி பணமில்லாமல் போண்டியாகிவிட்டது என்பதை நாம் நம்பத் தாயாரில்லை.

இந்நாட்டின் பேரிய தருணங்களான பேழையில், போதிய பணம் இல்லை என்பதை நம்ப மறுக்கிறோம்.

ஆகவே, இந்த காசோலையைப் பணமாக்க, நமக்கு விடுதலையின் செல்வாக்கையும் நீதியின் பாதுகாப்பையும் வேண்டிய பொழுது தரக்கூடிய இந்தக் காசோலையைப் பணமாக்க இங்கு வந்திருக்கிறோம்.

மேலும், இத்தருணத்தின் மிகுந்த அவசரத்தை அமெரிக்காவிற்கு உணர்த்த இந்தப் புனிதமான இடத்திற்கு வந்திருக்கிறோம்.

படிப்படியாய்ச் சரியாகி விடும் என்று போதையிலே ஆழ்வதற்கும், கிடப்பிலே போட்டு விட்டு ஓய்வதற்கும் இது நேரமல்ல.

இருளிலிருந்து எழுவதற்கும், பாகுபாட்டுப் பள்ளத்தாக்கினை, இன நீதியின் ஒளிப் பாதையிலே கொண்டு சேர்ப்பதற்கும், இதுதான் தருணம்.

வாய்ப்புகளின் கதவுகளைக் கடவுளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் திறந்து விட இதுதான் சிறந்த நேரம்.

இன அநீதிகளின் புதைமணலிலிருந்து, நம்முடைய நாட்டினை சகோதரத்துவமெனும் திடமான மலைப்பாறைகளுக்கு இட்டுச் செல்ல இதுவே தருணம்.

இத்தருணத்தின் அவசரத்தை மேலோட்டமாய்ப் பார்ப்பதும் மற்றும் நீக்ரோவின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதும் இந்த தேசத்திற்கு அழிவையே அளிக்கும்.

நியாயமாய் நீக்ரோ உணர்கின்ற இந்த அநீதியின் கொளுத்துகின்ற கோடைகாலம், விடுதலையும் சம உரிமையுமான இளவேனில் காலம் வரும் வரை மாறாது.

1963 ஒரு முடிவல்ல. மாறாக, அது ஒரு தொடக்கம்.

நீக்ரோ தன் மனக் கொந்தளிப்பை வெளியே கொட்டிவிட்டால் சமாதானமாகி விடுவான் என நம்பி, வழக்கம் போல மீண்டும் பழையபடியே திரும்புபவர்களுக்கு ,அதிரவைக்கும் விழிப்பு காத்திருக்கிறது.

நீக்ரோவிற்கு, இந்த மன்ணின் மைந்தனுக்குரிய உரிமைகள் அளிக்கப் படும் வரை ஓய்வும் அமைதியும் அமெரிக்காவில் இருக்காது.

நீதி பிரகாசிக்கும் நாள் வரும் வரை, புரட்சிச் சூறாவளி, இந்த நாட்டின் அடித்தளத்தை உலுக்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால், நீதியின் மாளிகைக்கு இட்டுச்செல்லும் வாயிலில் நிற்கும் நம் மக்களுக்கு, நான் ஒன்று கூறிக் கொள்ள வேண்டும்.

நமக்குரிய இடத்தை அடையும் முயற்சியில், நாம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கலாகாது.

நாம் நம்முடைய சுதந்திர தாகத்தை தணித்து கொள்வதற்காக, மனக்கசப்பினையும் வெறுப்பினையும் பருகத் தேவையில்லை.

நம்முடைய போராட்டத்தை ஓர் உயர்ந்த தளத்தில், மதிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும்.

நம்முடைய ஆக்க பூர்வமான எதிர்ப்பு, வன்முறையாய் இழிந்து போவதை நாம் அனுமதிக்கலாகாது.

மீண்டும் மீண்டும் நம்முடைய ஆன்ம பலத்தினால், ஆள் பலத்தை எதிர்கொண்டு, மாபெரும் உயரத்திற்கு நம்மை நாமே மேலுயர்த்திச் செல்ல வேண்டும்.

நீக்ரோ சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் பிரமிக்கத்தக்க இந்த புதிய இராணுவத்துவம் எல்லா வெள்ளையரையும் நம்ப முடியாத நிலைக்கு நம்மை இட்டுச் செல்லலாகாது. பற்பல வெள்ளையர் சகோதரர்கள் தங்களுடைய சுதந்திரம் நம்முடைய சுதந்திரத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு இங்கு அவர்களின் வருகையே சாட்சி.

நாம் தனியாக நடக்க இயலாது.

நாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, மென்மேலும் முன்னோக்கிச் செல்வோம் என்று நாம் ஆணைமேற்கொள்வோம்.

நாம் இனி திரும்பிச் செல்ல இயலாது.

மனித உரிமையைப் பெரிதும் மதிப்போரிடம் , 'எப்பொழுது நீ திருப்தி அடைவாய் ? ' என்று சிலர் கேட்கிறார்கள்.

பயணக் களைப்பினால் வரண்டு கிடக்கும் நம்முடைய உடல் நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள விடுதியிலும் நகரத்திலுள்ள தங்குமிடங்களிலும் களைப்பாற இடம் கிடக்கும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

சிறு குப்பத்திலிருந்து பெரிய குப்பத்துக்குத் தான் நீக்ரோ செல்லமுடியும் என்கிற விதி மாறும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

மிசிசிப்பியின் நீக்ரோ ஓட்டுப் போட முடியாத நிலையிலும், நியூ யார்க்கின் நீக்ரோ ஓட்டுப் போடுவதற்கு ஒன்றுமில்லாத இல்லாத நிலையிலும் இருக்கும் போது, நம்மால் திருப்தி அடைய முடியாது.

இல்லை, இல்லை, நாம் திருப்தி அடையவில்லை. நீர் பாய்வது போல் நீதி பாயும் வரை, மடை திறந்த வெள்ளமாய் நேர்மை பாயும் வரை நாம் திருப்தி அடைய மாட்டோம்.

உங்களில் சிலர், ஏராளமான சோதனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவில் இங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாமலில்லை.

உங்களில் ஒரு சிலர் அந்தக் குறுகிய அறைகளிலிருந்து நேரே இங்கு வந்திருக்கிறீர்கள்.

உங்களின் சுதந்திர தாகத்தால், தண்டனைப் புயலால் தாக்கப் பட்டும் போலீஸ் அராஜகக் காற்றால் உருட்டப் பட்டும் கூட உங்களில் சிலர் இங்கு வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் நூதனமான துன்பங்களில் உழன்று காய்ப்பேறி இருக்கிறீர்கள்.

தேவையில்லாமல் தேடி வந்த துன்பம், நம்மைக் கடத்தேற்றவல்லது என்ற நம்பிக்கையுடன், தொடருங்கள் உங்கள் உழைப்பை.

திரும்பிச் செல்லுங்கள் மிசிசிப்பிக்கு, திரும்பிச் செல்லுங்கள் அலபாமாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் ஜியார்ஜியாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் லூசியானாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களின் பட்டி தொட்டிகளுக்கு, எப்படியாவது இந்த நிலை மாறியே தீரும், மாற்றியே தீருவோம் என்பதை அறிந்து கொண்டு.

பரிதாபமெனும் பள்ளத்தாக்கிலே, நாம் கிடந்து உருள வேண்டாம்.

இன்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன் நண்பர்களே,! எவ்வளவுதான் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்தாலும் எனக்குள் ஒரு கனவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இது அமெரிக்காவைப் பற்றிய கனவில் மிக ஆழமாய்ப் பதிந்த கனவு.

ஒரு நாள், இந்த தேசம் உயர்ந்து நின்று 'அனைத்து மனிதர்களும் சரிசமமாய் உருவாக்கப்பட்டார்கள் என்பது நிரூபணம் வேண்டாத உண்மையெனப் புரிகிறோம் ' எனும் கொள்கைக்கேற்றபடி வாழுமென, அதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டு விடுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், ஜியார்ஜியாவின் சிவப்பு மலைக்குன்றுகளில் முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமைகளின் எஜமானர்களின் பிள்ளைகளும் ஒரு சகோதரத்துவ மேசையில் சரிசமமாய் உட்கார முடியுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், அநீதியிலும் அடக்குமுறையிலும் வெந்து காய்ந்து பாலைவனமாய் காட்சி அளிக்கும் மிசிசிப்பி மாநிலம், சுதந்திரமும் நீதியும் கொண்ட ஒரு பசுஞ்சோலையாய் மாறிவிடும் என்று எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், எனது நான்கு பிள்ளைகளும் நிறத்தை வைத்து மதிப்பிடாமல் குணத்தை வைத்து மதிப்பிடும் தேசத்தில் வாழப்போகிறார்கள் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

அர்த்தமற்ற வார்த்தைகளை வீணாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் ஆளுனரைக் கொண்ட அலபாமா மாநிலத்தில், கருப்பு சிறுவர் சிறுமியருடன் வெள்ளை சிறுவர் சிறுமியர்கள் ஒன்றாய் கை கோர்த்து சகோதர சகோதரிகளாய் உலவி வரும் மாநிலமாய் ஒரு நாள் மாறிவிடும் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

ஒரு நாள், ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மேம்படுத்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் சரிக்கப்படும், கரடுமுரடான பகுதிகள் சீர்படுத்தப்படும், வளைவுகளும் நெளிவுகளும் நேர் படுத்தப்படும், இறைவனின் பெருமை வெளிப்படுத்தப்படும், எல்லா உயிர்களும் இவற்றை ஒன்றிணைந்து பார்க்கும்.

இதுதான் நமது எதிர்பார்ப்பு.

இந்த நம்பிக்கையுடன் நான் தெற்கே திரும்பிச் செல்கிறேன்.

இந்த நம்பிக்கையுடன் ஒரு பெரிய மலை போன்ற அவநம்பிக்கையிலிருந்து, ஒரு சிறு கல் போன்ற எதிர்பார்ப்பை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த நம்பிக்கையுடன் தாறுமாறாய் காதில் ஒலிக்கும் நமது தேசத்தின் சத்தங்களை இனிமையான சகோதரத்துவ சங்கீதமாய் நம்மால் மாற்ற முடியும்.

இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒன்று கூடி உழைக்க முடியும், ஒன்று கூடி பிரார்த்திக்க முடியும், ஒன்று கூடி கஷ்டங்களை எதிர் நோக்க முடியும், ஒன்று கூடி சிறை செல்ல முடியும், ஒன்று கூடி விடுதலைக்குப் போராட முடியும், என்றாவது ஒரு நாள் விடுதலையாவோம் என்ற தெளிவுடன்.

அந்த நாளிலே, இறைவனின் எல்லாக் குழந்தைகளும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அர்த்தத்துடன் இந்த பாடலை பாட முடியும், 'எனது நாடே, நீ இனிமையான சுதந்திர நாடு, நான் உன்னைப் பற்றிப் பாடுகிறேன். என் தந்தையர் இறந்த நாடு, பக்தர்களின் பெருமை கொண்ட நாடு, ஒவ்வொரு மலைப் பகுதியிலிருந்தும் சுதந்திர ஓசை ஒலிக்கட்டும் '

அமெரிக்கா ஒரு உயர்ந்த தேசமாக வேண்டுமெனில், இது உண்மையாக வேண்டும்.

எனவே, சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ யார்க்கின் பலம் வாய்ந்த மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, பென்சில்வேனியாவின் உயரிய அல்லெஜீனி மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கொலொராடோவின் பனி மூடிய பாறைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கலிபோர்னியாவின் வளைவுகள் கொண்ட முகடுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, டென்னிசியின் ஏறி நின்று பார்க்கக் கூடிய மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, மிசிசிப்பியின் ஒவ்வொரு மலை மற்றும் குன்றிலிருந்தும் ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, ஒவ்வொரு மலைபகுதியிலிருந்தும் ஒலிக்கட்டும்.

நாம் இப்படி சுதந்திர ஓசை ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், பட்டி தொட்டிகளிலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, கடவுளின் எல்லாக் குழந்தைகளும், கருப்பர்களும் வெள்ளையர்களும் உட்பட, யூதர்களும் ஜென்டில்ஸ்களும் உட்பட, புராடஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கர் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து கை கோர்த்துப் பாட முடியும், பழைய நீக்ரோ தெய்வீகப் பாடலை. 'விடுதலை இறுதியில்! விடுதலை இறுதியில்! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, நாம் அனைவருக்கும் இறுதியில் விடுதலை!! '
-----
நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

ஆங்கிலம் பேசுவோர் சர்வதேசவாதிகள்! தமிழ் பேசுவோர் இனவாதிகள்!!" இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம் இப்படியான வெவேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அனுபவங்கள் வேடிக்கையானவை. அந்த விசித்திர அனுபவங்களை அலசுவதன் மூலம் அவர்களின் உலகையும், அதனூடாக எம்மையும் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை 500 வருட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவு. இன்று இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமல்ல, அடித்தட்டு வர்க்கத்தினர் கூட காலனிய மனவுலகில் வாழ்கின்றனர். அல்லது அப்படி வளர்க்கப்படுகின்றனர். பண்டைய காலங்களில் எமது மூதாதையர் எம்மைப்போல சிந்திக்கவில்லை. நான் நாகரீக வளர்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. தன்னிலையுணர்வை, சமூகத்தில் தனது பாத்திரம் பற்றிய வரையறை பற்றியே இங்கே பேசப்படுகின்றது. தமிழர், சிங்களவர் என்ற மொழியை அடிப்படையாக கொண்ட தேசியம் உருவான 20 ம நூற்றாண்டு வரையில், மக்கள் தமது குலத்தை, சாதியை, பிரதேசத்தை, அதற்கும் மேலால் மதத்தை கொண்டு மட்டுமே தம்மை அடையாளப்படுத்தினர். தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனால் வாழும் இடத்தை பொறுத்து தமிழர் சிங்களவராவதும், சிங்களவர் தமிழராவதும் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை.

ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் அப்போது தமது தாயகத்தில் இருந்ததைப் போல நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையையே பின்பற்றியதால், பெருமளவில் குடியேறியிருந்த அவர்களின் இனத்தை சேர்ந்த, அல்லது அவர்களுக்கு விசுவாசமான கலப்பின பறங்கியர் மட்டுமே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பவர்களாக இருந்ததால், உள்நாட்டு மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகக் குறைவே எனலாம். ஆனால் ஆங்கிலேயர் வந்த காலத்தில், உலகில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு மத்திய தர வர்க்கம் தேவைப்பட்டது.

ஒரு சாம்ராஜ்யம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூரில் ஒரு அடிவருடிக் கும்பல் உருவாக வேண்டும். அந்தக் குழுவை சேர்ந்த பிள்ளைகளை சாம்ராஜ்ய தலைநகருக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். ஏகாதிபத்திய கல்வியால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஊர்திரும்பும் புதிய தலைமுறை, சாம்ராஜ்யத்தின் உள்ளூர் முகவர்களாக ஆட்சியை நிர்வகிப்பார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மாபெரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட எகிப்தியர்களும், ரோமர்களும் அறிமுகப்படுத்திய "ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எப்படி?" என்ற பாடத்தை ஆங்கிலேயர்கள் கச்சிதமாக கடைப்பிடித்தனர். உள்நாட்டு நிலச்சுவாந்தர்கள் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்குமளவு பணவசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக இருந்தால் சலுகைகள் கிடைத்தன. ஆட்சியாளரின் ஆங்கிலேய கல்வியை கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது எளிதாக இருந்தது.

இன்று ஆங்கில மோகம் கொண்ட தலைமுறைக்கு மேற்குறிப்பிட்ட சரித்திர சான்றுகள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை சரித்திரம் என்ற ஒன்றே கிடையாது. உலகம் இப்போது உள்ளதைப்போல, அப்போது இருந்தது, அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆங்கிலம் உலக மொழியானது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்று வாதிப்பார்கள், அல்லது மதப்பற்றாளர்கள் என்றால் அதுவே கடவுளின் விருப்பம் என்பர். அந்த வர்க்கத்தை சேர்ந்த படித்து பட்டம் பெற்றோரும், ஆங்கிலமே உலகம் முழுவதும் பேசப்படுவதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது உலகமானது, கடல் கடந்த தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அப்பால் எதுவுமே இல்லை. தப்பித்தவறி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் புகுந்து விட்டால், இந்த மக்கள் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்கள் இல்லை என்று நொந்து கொள்வார்கள். அதே நேரம் ஆங்கிலேயர் தம் நாட்டில் வேறு மொழி பேசப்படாததேன் என்று கேட்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால், எமது "கறுப்பு-ஆங்கிலேயர்கள்", "வெள்ளை-ஆங்கிலேயரை" விட ஒரு படி மேலே போய் விட்டனர்.

நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு தம்மைப் போன்றோர் மட்டுமே உலகில் இருப்பதாக எண்ணம் இருக்கும். அதற்கு காரணம் கலாச்சாரம் அவர்கள் சார்ந்ததாக இருப்பது தான். திரைப்பட கதா மாந்தர்கள் நடுத்தர வர்க்க பிம்பமாக காட்சிதருவர். இலக்கியங்கள் யாவும் எழுதப்படிக்கத் தெரிந்த பிரிவையே சந்தையாக கொண்டிருக்கும். பல படி முறைப்பட்ட சமூகத்தில், அந்தஸ்து என்பது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கும். முதலாளித்துவ கல்விமுறை தமக்கு சேவகம் செய்பவர்களை உருவாகுவதை நோக்கமாக கொண்டது. அதிலும் திறமை கொண்டவர்க்கு அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. இதனால் ஒப்பீட்டளவில் உழைக்கும் வர்க்கத்தை விட மேல்நிலையில் இருக்கும் வசதி கருதி, அதை அடையும் வழி கருதி, கல்வியை ஒரு ஊக்கியாக நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டதில் வியப்பில்லை. அதிலும் ஆங்கில வழிக் கல்விக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்ய ஆங்கிலம் கற்றவர்கள் அவசியம். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூலதனம் குவிந்து கிடப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மதிப்பு அதிகம்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்கிலமே பாடசாலைகளில் போதனா மொழியாக இருந்தது. ஐம்பதுகளில் தேசியவாத சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்து பிரதமரான பண்டாரநாயக்க வந்த பின்னரே மாபெரும் சமூக-கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. சிங்களப்பகுதிகளில் சிங்களமும், தமிழ் பகுதிகளில் தமிழும் போதனாமொழியாகியது. பண்டரநாயக்கவை ஒரு சிங்கள இனவாதியாக பார்க்கும் தமிழர்கள், தமது பிள்ளைகள் தமிழ் கற்க காரணம் யார் என்று சொல்வதில்லை. அதேநேரம் அவரை ஒரு முற்போக்குவாதியாக பார்க்கும் சிங்களவர்கள் இன முரண்பாடுகளின் தோற்றத்தை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் ஏகாதிபத்தியமும் தனது நலன்களை பற்றி மட்டுமே அக்கறைப்பட்டது. கல்வியை தேசிய மொழியாக்குவதும், பொருளாதாரத்தை பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாக புரிந்து கொண்ட சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.

பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்ட திருப்புமுனையின் பின்னர் தான், ஆங்கிலம் பேசுவோர் "சர்வதேசவாதிகள்"(ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதன் நாகரீக வடிவம்) ஆனார்கள். அதேநேரம் தமிழ் பேசுவோர் "இனவாதிகள்" (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதன் புராதன வடிவம்) என வகைப்படுத்தப்பட்டனர். சிங்களவரும், தமிழரும் ஒருவரை ஒருவர் இனவாதிகள் என்று குற்றம் சாட்டுவது வேறு விடயம். நான் இங்கே ஏகாதிபத்திய மேற்பார்வை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இப்போது கூட உள்நாட்டு அரசியல்வாதிகளைப் பரிகசித்துக் கொண்டிருக்கும் இந்த "கறுப்பு-ஆங்கிலேயர்கள்", ஐரோப்பிய வெள்ளையின "தேவர்களின் வருகைக்காக" காத்திருக்கின்றனர். உலகமயமாக்கலும், மறுகாலனியாதிக்க அலையும், அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியது. புதிது புதிதாக கடை விரித்த பன்னாட்டு கம்பனிகளில் தமது ஆங்கிலப் புலமையை காட்டி ஒட்டிக் கொண்டனர். சர்வதேச மூலதனம் அள்ளி வழங்கிய, பணத்தை கண்டு மயங்கினர். இதனால் அவர்களது ஆங்கில மோகமும், அது தந்த செருக்கும் கூடியதே தவிரக் குறையவில்லை. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்கமும், கறுப்பு-ஆங்கிலேயரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச மூலதனமானது, உலகின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் முதலாளிகளை வளர்த்து விடுகின்றது. உள்ளூர் முதலாளிகளைப் பொறுத்தவரை, கடல்கடந்த கனவுகள் இருந்தபோதும், முதலில் உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தவிர்க்கவியலாமல் உள்ளூர் மக்கள் பேசும் தமிழ் மொழி வளர்ச்சியடைகின்றது. ஒரு சரக்கின் விற்பனை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது. அது நகரம் தவிர்ந்த நாட்டுப்புறங்களில் பலருக்குப் புரியாது. அதனால் தான் மூலதனத்தின் வளர்ச்சியினால், தமிழ் மொழியின் வளர்ச்சி(பிற மொழிகளைப் போன்றே) தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளில் ஒன்று.

இருப்பினும் ஊடகங்களின் பெருக்கமானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு துணை போனாலும், அதன் மூலமாக ஆங்கிலம் மறைமுகமாக திணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், திரையுலக பிரபலங்கள் போன்றோர், தமிழுடன் ஆங்கிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து பேசுவதை, இந்த தொலைக்காட்சிகள் அனுமதிக்கின்றன. மேலை நாடுகளில் அப்படி ஒருவர் பேட்டியளித்தால், (உதாரணத்திற்கு பிரெஞ்சு டி.வி.யில் ஒருவர் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பேசினால்) அதனை உப தலைப்புகளுடன் தான் ஒளிபரப்புவார்கள். அதே போன்று எமது தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்யாத காரணம் என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த பாமரனும் ஆங்கிலம் கற்பதற்கான ஏக்கத்தை உருவாக்குவதை தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

நவீன தமிழின் நிலைமையை, நவீன அரபு மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அரபு மொழி, தமிழ் மொழி போல இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழி தான். நவீன அரபு மொழியானது நிறைய ஆங்கில அல்லது பிரெஞ்சு சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து அரபு நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர் அறிமுகப்படுத்திய கல்விமுறையே இன்றுவரையில் போதிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வவ் நாடுகளின் அரசியல்-பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டு, கல்வியின் போதனா மொழி மாறுபடுகின்றது. இரண்டு மாறுபட்ட உதாரணங்களைப் பார்ப்போம். மொரோக்கோவில் உயர்கல்வி முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் போதிக்கப்படுகின்றது. இதனால் சிறுவயதில் இருந்தே பிரெஞ்சு மொழி வழிக் கல்வியை பெற்றுவரும் நடுத்தர வர்க்க மாணவர்கள் இலகுவாக உயர்கல்வி கற்க வாய்ப்பாகின்றது. அதற்கு மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் உழைக்கும் வர்க்க பிள்ளைகள், தாய்மொழியான அரபு மொழியில் கல்வி கற்பதால், உயர்கல்விக்கான வாய்ப்பு தடைப்படுகின்றது. இத்தகைய கல்விமுறை நாட்டில் இரு வர்க்கங்களினதும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றது. பிரெஞ்சு வழிக் கல்வி கற்ற "புத்திசாலிகள்" வசதிபடைத்தோராயும், அரபு வழிக் கல்வி கற்ற "முட்டாள்கள்" வசதியற்ற ஏழைகளாகவும், சமூகத்தில் பார்க்கப்படுவதற்கு பாரபட்சமான கல்விமுறை ஏதுவாகின்றது. அதேநேரம் அசாத் தலைமையில் சோஷலிச மாற்றங்கள் ஏற்பட்ட சிரியாவில், அனைத்துப் பாடங்களும், மருத்துவம் உட்பட, அரபு மொழியிலேயே போதிக்கப்படுகின்றன. இதனால் அனைவரும் கல்விகற்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், அரபுலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடாக சிரியா திகழ்கின்றது.

நம்மவர்கள் அதிகம் மெச்சிக் கொள்ளும் ஐரோப்பிய உதாரணங்களைப் பார்ப்போம். இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பிரபுக்களும் பிரெஞ்சில் கல்வி கற்று பிரெஞ்சு மொழியிலேயே தமக்குள் உரையாடினர். ரஷ்யாவிலும் அது தான் நிலைமையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட ஆங்கில, ரஷ்ய மொழிகள் கல்வியறிவற்ற சாதாரண குடிமக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்தது. என்றைக்கு இங்கிலாந்தில் ஆங்கில மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், போதனா மொழியாகியதோ, அப்போதிருந்து தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியது. இன்று அந்நாடுகளில் மொத்த சனத்தொகையும் எழுத, வாசிக்க தெரிந்து வைத்திருக்கின்றது என்றால், அதற்கு தாய்மொழிக் கல்வியே காரணம்.

நமது நாடுகளில், அந்நிய மொழியை புறக்கணித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கப் படாததன் காரணம், வெளிநாட்டு மூலதனத்தின் கவர்ச்சிக்கு மயங்கும் மக்களும், நவகாலனிய முகவர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் தான். இரண்டாவது வகையினர் அந்நிய கடனுக்கு அடிமையானது கவனிக்கத்தக்கது. தமிழ் நாடு என்று மொழிவாரி மாநில அதிகாரம் கொண்டிருந்தாலும், உலகவங்கி, ஐ.எம்.எப்., போன்றவை தரும் கடனுக்கு கட்டுப்படுவதால், தனியார்மயம் என்ற பதாகையின் கீழ் முளைக்கும் ஆங்கிலவழிப் பாடசாலைகளை தடுக்க முடியாத நிலை. இதுவே நாளைக்கு தமிழ் ஈழம் வந்தாலும் ஏற்படப்போகின்றது. ஒருவகையில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வது கூட, காலனிய எஜமானர்களுக்கும், உலகவங்கிக்கும் விரும்பத்தக்க பலன்களையே தருகின்றது. ஏனெனில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, தாய்மொழிக் கல்விக்கு செலவிடவும், அதேநேரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்கவும் முடியும். மேற்குலக நாடுகள் எல்லாம் அவ்வாறு தான் அபிவிருத்தியடைந்தன. மேற்குலக சீரழிவுகளை இறக்குமதி செய்பவர்கள், அந்நாடுகளில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரசியல்வாதிகள் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே மேற்குலக மோகத்திற்குள் மயங்கிக் கிடக்கின்றனர்.

தமிழ் செம்மொழி என்று பழம் பெருமை பேசுவதாலோ, தமிழ்கலாச்சாரத்தை பாதுகாப்பதாலோ, அல்லது தமிழ் தேசியம் கோலோச்சுவதாலோ, பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது. இங்கிலாந்து கண்ட தொழிற்புரட்சி, ரஷ்யா கண்ட போல்ஷெவிக் புரட்சி, சிரியா கண்ட (முற்போக்கு) இராணுவப்புரட்சி; இவையெல்லாம் பொருளாதார சுதந்திரத்தை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டதால் தான் தமது தாய்மொழியை அரியணையில் அமர்த்த முடிந்தது. வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.

நன்றி:
கலையகம்.

Read more...

கம்பர் படைத்த ஏரெழுபது!

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். கம்பராமாயணத்தைப் போல ஏரெழுபது பிரபலம் அடையாவிடினும்
மிக அருமையான கவிதைகளால் உழவுத்தொழிலின் சிறப்பை சொல்கின்றது.

ஏரெழுபது

பாயிரம்

1. கணபதி வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4

5. சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6

7. வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.


நூல்

1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10

2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11

3. ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12

4. அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15

7. நுகத்தடிச் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17

9. நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18

10. பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19

11. தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20


12. கொழுச் சிறப்பு

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே. 21

13. கொழு ஆணியின் சிறப்பு

செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுநீரா நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே. 22

14. தாற்றுக்கோல் சிறப்பு

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. 23

15. உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 24

16. எருதின் கழுத்துக்கறை சிறப்பு

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே. 25

17. எருது பூட்டுதற் சிறப்பு

ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. 26

18. ஏர் பூட்டலின் சிறப்பு

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே. 27

19. ஏர் ஓட்டுதலின் சிறப்பு

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே. 28

20. உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே. 29

21. உழவின் சிறப்பு

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. 30


22. உழுத சாலின் சிறப்பு

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. 31

23. மண்வெட்டியின் சிறப்பு

மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே. 32

24. வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 33

25. எருவிடுதலின் சிறப்பு

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. 34

26. சேறு செய்தற் சிறப்பு

வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. 35

27. பரம்படித்தலின் சிறப்பு

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்பிடிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. 36

28. வித்திடுதலின் சிறப்பு

பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 37

29. முளைத்திறனின் சிறப்பு

திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 38

30. நாற்றங்காலின் சிறப்பு

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றடைகடலைத் தானன்றோ?
வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. 39

31. நாற்று பறித்தலின் சிறப்பு

வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. 40


32. நாற்று முடி சுமந்த சிறப்பு

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. 41

33. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ? 42

34. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு

வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 43

35. பாங்கான நடவின் சிறப்பு

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே, கற்றாரே! 44

36. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 45

37. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. 46

38. வேளாண்மை முதலாதலின் சிறப்பு

அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. 47

39. பயிர் வளர்திறத்தின் சிறப்பு

சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. 48

40. நாளும் நீர் இறைத்தலின் சிறப்பு

காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 49

41. பாய்ச்சும் நீரின் சிறப்பு

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயர் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 50


42. நிலம் திருத்தலின் சிறப்பு

மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே. 51

43. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு

எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. 52

44. பைங்கூழ்ச் சிறப்பு

கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே. 53

45. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு

கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. 54

46. களை களைதற் சிறப்பு

வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 55

47. கருப்பிடித்தலின் சிறப்பு

திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. 56

48. கதிர் முதிர்தலின் சிறப்பு

ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. 57

49. பசுங் கதிர்ச் சிறப்பு

முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. 58

50. கதிரின் தலைவளைதற் சிறப்பு

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவநயும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. 59

51. சோறிடுஞ் சிறப்பு

அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே. 60


52 அறுவடை கொநடையின் சிறப்பு

அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படிவு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. 61

53. அரி சூட்டின் சிறப்பு

கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேறாதே. 62

54. களம் செய்தலின் சிறப்பு

சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே. 63

55. போர் அடிவலியின் சிறப்பு

கடிசூட்டு மலர்வாளி காமனுடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே. 64

56. அடிகோலின் சிறப்பு

முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டின்மிகுங் கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தமர்ந்து செந்நெற் சூடுமிதித் திடுங்கோலே. 65

57. போர் செய்தற் சிறப்பு

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே. 66

58. போர்க்களப் பாடுதற் சிறப்பு

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. 67

59. இரப்பவரும் தோற்காச் சிறப்பு

பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே. 68

60. போர் செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே. 69

61. எருது மிதித்தலின் சிறப்பு

எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவளரு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே. 70


62. நெற்பொலியின் சிறப்பு

விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 71

63. நெற்குவியலின் சிறப்பு

தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. 72

64. நெற்கூடையின் சிறப்பு

ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்த முயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 73

65. பொலி தூற்றுங் கூடைச் சிறப்பு

வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. 74

66. பொலி கோலின் சிறப்பு

சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 75

67. நெற்கோட்டையின் சிறப்பு

திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. 76

68. கல்லறைச் சிறப்பு

தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல். 77

69. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு

அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. 78

70. நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. 79


---
நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

Dec 8, 2008

தமிழுக்காக

உன்னை வைத்து(நினைத்து) சிலர்

சிலர் அவர்களின் முகங்களை
அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்

சிலர் அவர்களுக்கு தேவையான
ஆதாயம் தேடுகிறார்கள்

சிலர் கட்டாயத்தால் உன்னை
கசக்கி காயப்போடுகிறார்கள்

சிலர் பழமையைச் சொல்லி
பயமுறுத்துகிறார்கள்

சிலர் நீ தோன்றிய காலம்
சொல்லிகலக்கமடைய வைக்கிறார்கள்;

உன்னை விவாதித்து அரசியல் நடக்கிறது
உன்னை விற்று வியாபாரம் நடக்கின்றது

ஆனால் உன் உண்மை உருவை
யாராலும் உணரமுடியவில்லை.

நான் உணர்ந்துவிட்டேன்
பாத்திரம் தகுந்து மாறும் நீரைப் போன்றவள்

பச்சைக் குழந்தை நா முதல்பாழும் கிழவன் நா வரை
பக்குவமாக பவனிவரும்பட்டாம்பூச்சி நீ

தோன்றிய நாள்முதல்நிலை
மாறாமல் இருக்கும் கல் அல்ல- நீ
கல்லை சிற்பமாக மாற்றி
உயிரூட்டும் உன்னத படைப்பாளி - நீ

அன்று கற் குகையில் வாழ்ந்தான்
அவனுக்குக் கடினமாக இருந்தாய்.
இன்று கணிணியுகத்தில் வாழ்கிறான்
அதனால் நவீனமாக நளினமாக இருக்கிறாய்.

இதில் வியப்பதற்கும் ஒன்றுமில்லை
அதில் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை

உருவம் மாறியதால் உருக்குலையவில்லை
பெரிய கடல் ஆவியாகி பின் மழைத்துளியாய்
மண்ணில் விழுந்து மனிதனை உயிர்காப்பதுபோல்
நீயும் உன்னை உருமாற்றி ஒலி மாற்றி
மனதை உணரவைக்கிறாய்

-
கோவையிலிருந்து
மு.சரளா

-------------------------------------------------------------------------------
விவாதியின் வாசகி மு.சரளா இந்தியாவிலிருந்து அனுப்பிய கவிதை இது.!
வாசகர்கள் தங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
tamildebate@gmail.com

Read more...

Nov 18, 2008

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - மறைமலை அடிகள்

மறைமலையடிகள் படைத்த முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையிலிருந்து.....

முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவாராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.

உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியொடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டுவியந்த வண்ணமாய் மீன்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத் தாம் மரநழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தொறுந் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளி லிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந்தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர் தலையும் விரும்பிக்கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.

அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், "பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்"1 என்று உரை கூறினார். இது நிற்க.

இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப்பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னவென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொறு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திரிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின் மேல் மிக வருந்தி முயன்று எழுதிக் காட்டல் வேண்டும். இஃது அவனுக்குப் பெருநாள் வினையாக முடியும். நல்லிசைப்புலவனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெரு வியப்புணைர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லராயின நற்பெரும்புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் "சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்" காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப்படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.

2. பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."

என்பது குறுந்தொகை2 என்னும் பழைய தமிழ் நூலில் உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படியிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க நேயமுடையராய் வாழ்வது கண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து சொல்லியதாக இது பாடப்பட்டிருக்கின்றது. " என்மகள் வற்றக்காய்ச்சின கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கைகழுவாமலே உடுத்துக் கொண்டு, குவளைப் பூப்போன்ற மை தீட்டிய தன் கண்களிலே தாளிப்புச் செய்யும் புகைபட்டு மணக்கவும் அதனையும் பாராது, தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த சுவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும் இனிதாயிருக்கின்றதென்று சொல்லிக்கொண்டே உண்ணுதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினையுடைய என் மகளின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி அடைந்தது" என்பது தான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கையழகும், இதன்கட் காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன!

காதற்கணவனும் மனைவியுங் கெழுமி இருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் முல்லை எனப்படுமாகலின், இவ்வொழுக்கம் நடைபெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப 'முளிதயிர் பிசைந்த' என்றார்; என்னை? தயிர்பால் முதலியன ஆனிரைமிக்க முல்லை நிலத்திற்கே உரியனவாகலின் தன் கணவன் மேலுள்ள காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவி விட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும் போது மேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந் திரும்பினால் பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன் விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றாம்.

உள்ளமுவக்கும் நிலத்திற் கணவனும் மனைவியும் நேயமாய் மருவிவாழும் இயற்கை இப் பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற் போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது! இப் பொருளருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழு மொழுவென்று ஓடுவது போல் ஓசையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுமுழுச் சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற்பாலனவாகும் என்பது.

இத்துணை நுட்பமான உலகியற்பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப் பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற் பொருட்காட்சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம்பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். ஆண்டுக் கண்டு கொள்க. தி.மு. நானூறு ஆண்டு முதல் தி.பி. நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில், இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அந் நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும்.

இனித் திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றாண்டுகளிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின் நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுஞ் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகுமென்று அறிதல் வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்தபின் ஒரு ஐந்நூறாண்டுந் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப் புலவர்களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர்பலரும் வள்ளல் பலரும் ஆங்காங்கு மிக்கிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வவளத்தாலும் மேம்பட்டும், போர் வல்லமையிலும், பெருமையடைந்து, தமிழ்மொழியினைப் பலவிடங்களிலும் பெருகச் செய்வதிற் கருத்தூன்றினராய் இருந்தார்.

இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்காநிற்குந் திருக்குறள் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான சிறந்த தமிழ்க்காப்பியங்களும், பழமொழி, நான்மணிக்கடிகை முதலான அறநூல்களுந் தோற்றமுற்று எழுந்தன. இவ்வைந் நூறாண்டுகளுக்கு முன்னும் பின்னு மிருந்த தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்களெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன. பண்டைக் காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரியபெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனை வடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் மனவியற்கை நூல் பன்னெடுங்காலமாக மறைந்து கிடந்து பின்னர் இக்காலத்திலே தான் வெளிவந்துலாவலாயிற்று.

இன்னும் இக் காலத்திலே இன்றியமையாது அறியற் பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாந் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகி வந்தது; மற்று இக்காலத்திலோ அதனோடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடங்கிற்று; சொல் விழுப்பமும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியதோர் உரை மிக நுணுக்கமான அறிவினையுடைய நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் இறையனாரகப் பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத்திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்பட்டதாயினும், மற்றை உரைகள் போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற்பாலனவாம் அருட்பெருந் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக் காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ் மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப் பயிற்சியைப் பெருகச் செய்து வந்த நற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கீரனார் தாமென்று அறியற்பாற்று. இதற்குப் பிற்காலத்தே வடமொழிக் கலப்பாற் புதிது தோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வைந் நூறாண்டுகளும் விரிந்து பெருகி வழங்கிய தமிழ் நூல்களில் எட்டுணையுங் காணப்படாமை பெரிதும் நினைவு கூரற்பாற்று. பௌத்த சமயத் தோற்றமும் பெருக்கமும்

இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங்காங்கு விளக்க முற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும்.

பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்4. தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங், குளிர் மிகுந்த ஆசியாக் கண்டத்தின் வடக்கேயுள்ள ஆரிய மக்களைப் போல் அத்துணை உடல் வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றி யிருந்தமையால் தமிழர் தமக்குள்ளே கலாம் விளைவித்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட்கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையிலுள்ள அழகினைக் கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ்வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப் பொருளினிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ்வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர் இடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட் பொருளை மனத்தாற் பலகால் உறைத்து நினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர்.

இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப் பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப் பெறாமல், தொகுதி தொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்து போய் அங்கங்குள்ளாரொடு போர் புரிந்தும் அல்லாதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர் இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த் துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்று வந்த பலவகையான விலங்குகளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்வி செய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர். (இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள)

(-33-) "இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்
களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக் கொண்டு எம்முடன்
வாணிகஞ் செய்யாதே! (3)
செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலிசப்
படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன்
ஏகுகின்றாய்!
தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள்,
வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாகத் தப்பியோடி
அழிந்தனர். (4)

(-51-) ஆரியர்களையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து
கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத்,
தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8)

(-53-) இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த
அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டைகளையும்
நீ அழித்தன்றோ! (8)
துணைவ ரில்லாத சுசரவர்களுடன் போர்புரியும் பொருட்டு,
அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது காலாட்
களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான
இருபதின்மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய்,
நீ எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால்
அழித்துளையன்றோ! (9)

(-103-) இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை
ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப்படுத்துக!(9)

(-163) தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய், வலிய குதிரை
வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது.
அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்கு முன் ஓட்டப்பட்டு
வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (12)
அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது. தன்
தாய் தன் தந்தையின் பால் வந்திருக்கின்றது.
நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற்
செல்லும்: அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது
பல நன்கொடையினைத் தரும்." (13)

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணிப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்த போது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை "மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலத்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலுந் தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர்; சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம்விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத் தாந் தழுவியுந், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத் தொடங்கினர். இவ் விருவகை இனத்தாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழ்த்தி விடாமல், அவை தம்மிற் பெரும்பான்மையவற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார்.

இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விச் சடங்குகள் செய்ய வேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருமார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் "இங்ஙனந் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை?" என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம்வழிப்படுத்திக் கொண்டனர்.

இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்துபோந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன5. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமை யானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தின மையானும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன் பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூய நிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலும் மேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின.

மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சுதேயத்திற்6 றோன்றியதை யொத்த ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்று வரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரியபெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரிய முயற்சியில் தலைநின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ் மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரண மாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

இனி, இப் பொருள்களெல்லாம் பௌத்த சமய நூல்களிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவநாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கௌதமர் என்னுந் தமிழ்ப் பெரியார் விளக்க வந்தமையால் அவ்வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோன்றோர், தமக்குந் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக்களையே பௌத்த சமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம்பெற்றாராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌதம சாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்து போந்த மற்றை வினைச்சடங்குகளையும் மறுத்துக் கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூறாண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கில மொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவிலியம் மிண்டோ7 என்னும் ஆராய்ச்சி உரைகாரர், "காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலுங், கொத்து வேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குந் தொழிற்களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது * * * ஒரு புலவனும் ஒரு கால இயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்"8 என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர்தோன்றி விளங்கப்பெறும் ஒரு தன்மையுடையவாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரிய மக்கள் செய்துபோந்த வீணான வெறுஞ்சடங்குகளிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்து நின்ற தமிழ்மக்கள், தம் பண்டையாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத் தன்மையாகுமென்றுணர்ந்து கொள்க.

இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல்லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் 'அகப்பொருள்' என்பது ஆண்பெண் என்னும் இருபாலரையுஞ் செறியப் பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின் மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்றுதற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந் திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்9 என்பதனை அடிப்படையாகக் கொண்டு மக்களியற்கை முழுவதூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், 'புறப்பொருள்' என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமை யாதவன பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெருவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்"10

என்று கிளந்து கூறினார்.

இனி, இதுபோற், பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்புச் செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப் பண்பு செயல்கட்கு உரியார் பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது
அகத்திணை மருங்கின் அளவுத லிலவே"11

என்று கூறினார்.

இனி, அகம், புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவருமாயின் அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும்.

Read more...

Oct 13, 2008

விவரணப் படம் - றோயல் கல்லூரி

றோயல் கல்லூரி சம்பந்தமான ஒரு விவரணப்படம்!

Read more...

பாரதி எழுதிய கடிதங்கள்!




கடிதம் -1 - 1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.


(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)

ஒம்
ஸ்ரீகாசி
ஹனுமந்த கட்டம்


எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்


உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி
****


கடிதம் 2 எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919


கடயம்.
30 ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.


இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்


உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக


உனதன்புள்ள
சி. சுப்ரமணிய பாரதி.

( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)


***


கடிதம் 3 பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915


ஒம்
புதுச்சேரி
19 ஜுலை 1915


எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக


தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்


நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை


ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்


தம்பி - நான் ஏது செய்வேனடா


தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது


தம்பி - உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி


உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**


தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது


தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது


தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது


அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது


தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது


ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது


அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது


பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது


பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது


தொழில்கள், தொழில்கள் என்று கூவு


தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.


வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக


முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு


சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு


தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.


உனதன்புள்ள
பாரதி
**
பாரதியாரின் கடிதங்கள் பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவரான ரா. அ. பத்மநாபனால் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கிறது. நான் அடிக்கடி பாரதியின் படைப்புகளை வாசிக்க கூடியவன். மனம் சோர்வுறும் நேரங்களில் பாரதியை வாசித்தால் மிகுந்த உத்வேகம் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தின் வழியே பலமுறை உணர்ந்திருக்கிறேன்.


பாரதியின் கடிதங்கள் மிக அபூர்வமானவை. இந்த கடிதங்களின் அடிநாதமாக அன்றாட வாழ்வின் சிக்கல்களில் உழன்றபடியே தன் பெருங்கனவை சுமந்து கொண்டிருந்த கவியின் பெருவாழ்வு வெளிப்பட்டுள்ளது.


தனது புத்தகங்களை சிறப்பாக பதிப்பிக்கவும், அதை முறையாக விநியோகம் செய்யவும் தமிழ் மொழியின் வளரச்சியை உலகம் அறிய செய்யவும் பாரதிக்கு இருந்த விருப்பங்கள் இந்தக் கடிதங்களில் மிக வலிமையாக வெளிப்பட்டுள்ளது

பாரதியின் இந்த மூன்று கடிதங்களும் மிக முக்கியமானவை. முதல் கடிதத்தில் அவர் தன் மனைவியை காதலியாக அழைப்பதும் அவளது மனக்கவலையைப் போக்க உள்ள அருமருந்து தமிழ் படிப்பது ஒன்று தான் என்று சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று


இரண்டவாது கடிதம் சிறிய கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குமளவு கூட பொருளாதார வசதியின்றி அவர் சிரமப்பட்டதும் பொருளதவிக்காக எதிர்பார்த்திருந்ததும் வெளிப்படுகிறது. இந்த கடிதத்தில் உதவி கேட்பது தனிமையாக இருக்கும் போது கேட்கவும் என்ற வரி முக்கியமானது. அது போலவே அமரத்தன்மை பெறுக என்று ஆசி தரும் பாங்கும் அற்புதமானது


பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் பாரதியின் சத்தியவாக்குகள். அவரது உள்ளத்தில் இருந்த கோபம் அப்படியே பீறிடுகிறது. பரலி சு. நெல்லையப்பர் சுதந்திர போராட்ட வீரர். 1910ம் ஆண்டு திருவாசகம் நூலை இரண்டனாவிற்கு மலிவுப்பதிப்பாக்கி பல்லாயிரம் பிரதிகள் விற்றவர். பதிப்பு துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். இவரது சகோதர் சண்முக சுந்தரம் பிள்ளை. வ.உ.சியின் நெருங்கிய தோழர். சுதேசி கப்பல்கம்பெனி உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் கண்ணன்பாட்டு, நாட்டுபாட்டை புத்தமாக்கி வெளியிட்டார். லோகோபகாரி என்ற வார இதழை நடத்தியுள்ளார். பாரதி பாடல்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்.


கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் சொற்களும் அதன் உணர்ச்சி வேகமும் கடிதத்தின் வழியாக ஒலிக்கும் அவரது குரலும் தனிச்சிறப்பு கொண்டவை.
இந்த கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் ஜாதி என்ற சொல் இன்று நாம் குறிக்கும் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. வாய்விட்டு இந்த கடிதத்தினை வாசித்து பார்த்த போது அடையும் உணர்ச்சி பெருக்கு அலாதியானது.


**

நன்றி
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Read more...

இறுதிக் கடிதம்! - சே குவேரா

சே குவேரா எழுதிய இறுதி மடலின் தமிழ் வடிவம் -

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே.



1965-ம் ஆண்டு மத்தியில், க்யூபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சே ஃபிடலுக்கு எழுதிய கடிதம்.

நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

16 வயதினிலே…

பதினைந்து தாண்டிப் பறந்தோடும்
பட்டாம் பு+ச்சியாய் - பருவத்தின்
வார்ப்புகளில் கரைதொடும்
அலை நுரைகளாய் அள்ளுண்டு
கால் பதித்த - என்
பதினாறு வயது….!

கற்பனைத் தூரிகைகள் கொண்டு
என் வாழ்க்கை ஓவியங்களை வரைந்துவிட்ட
என் நினைவுப் பக்கங்களை நிரப்பிவிட்ட
அந்த பதினாறு வயதென்ற பனிமழை….
அதில் நனைந்து விட்ட போதும் - இன்றும்
எனக்கு அது கனவு போல….!

இரும்பு உடலின்
உலக்கை உதட்டில் அரும்பிய
பு+னைமுடி மீசையும் - அதை
விரல்களால் நீவிவிட்டு, என் குழந்தைத்
தோழர்கள் நடுவில் கட்டபொம்மன் வீர வசனமுமாய்…
வலம் வந்த அந்த பச்சைமர நாட்கள் - இன்னும் எனக்குள்
மழைநின்றும் மரக்கிளைகள் தூறிய ஒற்றைத்துளிகள்தான்….

பருவத்தின் பிடிகள்தான்
கிளர்ச்சிகளின் உருவம் தான் - இருந்தாலும்
இரவின் மடியில் எழுதிய
கவிதைகள் போல் - இன்னும்
எனக்குள் உயிர்த்து வாழும்
ஒற்றைப்பு+வாய் - என்
16 வயதுக் காதல்…!

இடையிடையே வந்து போகும் பள்ளிப்
பரீட்சைகளின் தோல்விகளும்…
சுட்டுப் போட்டாலும் தட்டுப்படாத - அந்தக்
கணக்குப் பாடமும்….
“பெரிய மனுசன்” நினைப்பில் களவாய்
இழுத்த கட்டுச்சுருட்டின்
புகையிலை வாசமும் - என்
பதினாறு வயதின் இடைச் செருகல்கள்…

இன்று நினைத்தாலும் விழிகள் நிறையும்!
தவறவிடப்பட்ட புகைவண்டியாய்
கையசைக்கும் என் பதினாறு வயதுக் காலங்கள்…
பதினாறு தாண்டி வருடங்கள் போனாலும்
பருவங்கள் மாறிப் புதியவன் ஆனாலும்
என் பழைய மனதும் - அதன்
இளமை நினைப்புக்களும் மட்டும்
தங்கி நிற்கிறது - என்
16 வயதினிலே….!

சு.விஷாகன்

Read more...

Oct 11, 2008

தமிழர் காசுகள்


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறா¢டமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன் நாகா¢கக் காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பொ¢தாகக் காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும. அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன. செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அ¡¢ய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பி¡¢ந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உ¡¢மையை நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர். அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியா¢ன் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும். இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் னெதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

நன்றி
தமிழம்

Read more...

தமிழ் மொழிக்கென ஒரு கோயில்

உலகில் உள்ள மொழிகளிலேயே "தமிழ் மொழி" தான் மூத்த மொழி. பன்னெடுங்காலமாக எழுத்து, ஒலிப்பு முறையில் தொடர்ந்துவருகிற இனிமையான மொழி இது. தமிழ் மொழிக்கென சிறப்பான இலக்கண வகைப்பாடும், இலக்கிய சான்றுகளும், ஏராளமாக உள்ளன.

உலக மொழிகளிலேயே தமிழ் மொழிக்குத்தான் கோயில் உள்ளது. இதனை சா.கணேசன் அவர்கள் காரைக்குடியில் உருவாக்கியுள்ளார்.

காரைக்குடியில் தமிழ் மொழியில் காவியம் படைத்த கம்பனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் கம்பன் விழா நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் மொழிக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் சா.கணேசன் அவர்களது உள்ளத்தில் தோன்றியது. இவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தமிழ்த் தாய்க்கென ஒரு கோவிலை கட்டவேண்டும் என்று எண்ணிய இவர் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தின் தெற்குப் பகுதியில், பொ¢யார் சிலைக்கு அருகில் இந்தக் கோயிலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்த் தாய்கான உருவமும் வடிவமைப்பும் மாமல்லபுர கட்டடக்கலை கல்லூ¡¢யின் முன்னாள் முதல்வரான திருமிகு கணபதி மற்றும் சா.கணேசன் அவர்களின் கருத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமிகு ப.சிதம்பரம் அவர்களது முயற்சியால் இக்கோயில் சிறப்பாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முக்கோண வடிவில் அமைந்த நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் தமிழ்ப் புலவர்களான திருவள்ளுவர், இளங்கோவடிகள் மற்றும் கம்பருக்காக தனித்தனியான பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் நுழைவுப் பகுதியின் இருபுறங்களிலும் ஒலித்தாய் மற்றும் வா¢த்தாயின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் கருவறைப்பகுதி வலது பக்கத்தில் அகத்தியரும், இடது பக்கத்தில் தொல்காப்பியா¢ன் உருவங்களும் உள்ளன.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன், தாமரை மலா¢ன் மீது அமர்ந்திருப்பது போன்று கற்சிலையாக உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தாய் தனது வலது கையில் ஒளிவிளக்கு ஏந்தியும், இடது கையில் வீணையை ஏந்தியும், வலது கீழ்க் கையில் உருத்திராட்ச மாலையை ஏந்தியும், இடது கீழ்க் கையில் ஓலைச்சுவடி ஏந்தியும் காணப்படுகிறது. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்த் தாயின் வளர்ச்சிக்கு உதவியதால், அவர்களது கொடிக்குறியீடான வில், புலி, மீன் சின்னங்கள் தமிழ்த்தாய்ச் சிலையின் தலையைச்சுற்றி அமைந்துள்ளஅரைவட்ட வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தண்டையும், சிலம்பும் தமிழ்த்தாயின் காலை அலங்கா¢க்கும் அணிகலன்களாகக் காணப்படுகின்றன.

தமிழ்த்தாயின் சிலையையும், தமிழ் மொழிக்கான இக்கோவிலை உருவாக்க எண்ணமிட்ட சா.கணேசன் அவர்களது படத்தினையும், இக்கோயில் அமைவிடத்தின் வரைபடத்தையும் கீழுள்ள படத்தில் காணலாம்.



நன்றி
தமிழம்

Read more...

சீனாவில் தமிழ் எழுத்தில் கல்வெட்டுகள்!




சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள், இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கி பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து, சீன நாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மலாக்கா வழியாகத் தென் சீனக் கடலை அடையலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இநதப் பாதை சுற்றுப் பாதையாகும். ஆயிரம் மைல்களுககு அதிகமாகப் பயணதூரம் நீளும். மேலும் பயண நேரத்திலும் பல மாதங்கள் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐநூற்றுவர் எனும் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்செள துறைமுக நகா¢ல் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலையத்தில் நிறுவப் பெற்றுள்ள சிவவிக்ரகம் குப்லாய்கான் என்னும் புகழ் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்கு சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவா¢ன் உடல் நலத்திற்காக இந்த ஆலையம் எழுப்பப்பட்டது. இந்த கோயில் திருக்காதலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலையத்தில் உள்ள சிவன் திருக்காதலீசுவன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.

சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவா¢ன் பெயர் தவச் சக்கரவரத்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பெளர்ணமி அன்று இந்த ஆலையம் நிறுவப்பட்டது.

கி,பி, 1260 ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய சக்கரவர்த்தியான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பீஜிங் நகரை நிர்மாணித்து அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவனுடைய பேரரசு வி¡¢ந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான்.

புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கினான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சியக் காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர. அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இந்நாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பா¢மாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீனச் சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வா¢கள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

நன்றி: -
தமிழம்
தென் ஆசியச் செய்தி இதழ் - திராவிட ராணி இதழ் சூலை 2008

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP