16 வயதினிலே…
பதினைந்து தாண்டிப் பறந்தோடும்
பட்டாம் பு+ச்சியாய் - பருவத்தின்
வார்ப்புகளில் கரைதொடும்
அலை நுரைகளாய் அள்ளுண்டு
கால் பதித்த - என்
பதினாறு வயது….!
கற்பனைத் தூரிகைகள் கொண்டு
என் வாழ்க்கை ஓவியங்களை வரைந்துவிட்ட
என் நினைவுப் பக்கங்களை நிரப்பிவிட்ட
அந்த பதினாறு வயதென்ற பனிமழை….
அதில் நனைந்து விட்ட போதும் - இன்றும்
எனக்கு அது கனவு போல….!
இரும்பு உடலின்
உலக்கை உதட்டில் அரும்பிய
பு+னைமுடி மீசையும் - அதை
விரல்களால் நீவிவிட்டு, என் குழந்தைத்
தோழர்கள் நடுவில் கட்டபொம்மன் வீர வசனமுமாய்…
வலம் வந்த அந்த பச்சைமர நாட்கள் - இன்னும் எனக்குள்
மழைநின்றும் மரக்கிளைகள் தூறிய ஒற்றைத்துளிகள்தான்….
பருவத்தின் பிடிகள்தான்
கிளர்ச்சிகளின் உருவம் தான் - இருந்தாலும்
இரவின் மடியில் எழுதிய
கவிதைகள் போல் - இன்னும்
எனக்குள் உயிர்த்து வாழும்
ஒற்றைப்பு+வாய் - என்
16 வயதுக் காதல்…!
இடையிடையே வந்து போகும் பள்ளிப்
பரீட்சைகளின் தோல்விகளும்…
சுட்டுப் போட்டாலும் தட்டுப்படாத - அந்தக்
கணக்குப் பாடமும்….
“பெரிய மனுசன்” நினைப்பில் களவாய்
இழுத்த கட்டுச்சுருட்டின்
புகையிலை வாசமும் - என்
பதினாறு வயதின் இடைச் செருகல்கள்…
இன்று நினைத்தாலும் விழிகள் நிறையும்!
தவறவிடப்பட்ட புகைவண்டியாய்
கையசைக்கும் என் பதினாறு வயதுக் காலங்கள்…
பதினாறு தாண்டி வருடங்கள் போனாலும்
பருவங்கள் மாறிப் புதியவன் ஆனாலும்
என் பழைய மனதும் - அதன்
இளமை நினைப்புக்களும் மட்டும்
தங்கி நிற்கிறது - என்
16 வயதினிலே….!
சு.விஷாகன்
0 comments:
Post a Comment