Oct 13, 2008

பாரதி எழுதிய கடிதங்கள்!




கடிதம் -1 - 1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.


(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)

ஒம்
ஸ்ரீகாசி
ஹனுமந்த கட்டம்


எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்


உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி
****


கடிதம் 2 எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919


கடயம்.
30 ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.


இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்


உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக


உனதன்புள்ள
சி. சுப்ரமணிய பாரதி.

( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)


***


கடிதம் 3 பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915


ஒம்
புதுச்சேரி
19 ஜுலை 1915


எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக


தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்


நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை


ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்


தம்பி - நான் ஏது செய்வேனடா


தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது


தம்பி - உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி


உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**


தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது


தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது


தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது


அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது


தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது


ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது


அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது


பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது


பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது


தொழில்கள், தொழில்கள் என்று கூவு


தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.


வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக


முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு


சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு


தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.


உனதன்புள்ள
பாரதி
**
பாரதியாரின் கடிதங்கள் பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவரான ரா. அ. பத்மநாபனால் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கிறது. நான் அடிக்கடி பாரதியின் படைப்புகளை வாசிக்க கூடியவன். மனம் சோர்வுறும் நேரங்களில் பாரதியை வாசித்தால் மிகுந்த உத்வேகம் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தின் வழியே பலமுறை உணர்ந்திருக்கிறேன்.


பாரதியின் கடிதங்கள் மிக அபூர்வமானவை. இந்த கடிதங்களின் அடிநாதமாக அன்றாட வாழ்வின் சிக்கல்களில் உழன்றபடியே தன் பெருங்கனவை சுமந்து கொண்டிருந்த கவியின் பெருவாழ்வு வெளிப்பட்டுள்ளது.


தனது புத்தகங்களை சிறப்பாக பதிப்பிக்கவும், அதை முறையாக விநியோகம் செய்யவும் தமிழ் மொழியின் வளரச்சியை உலகம் அறிய செய்யவும் பாரதிக்கு இருந்த விருப்பங்கள் இந்தக் கடிதங்களில் மிக வலிமையாக வெளிப்பட்டுள்ளது

பாரதியின் இந்த மூன்று கடிதங்களும் மிக முக்கியமானவை. முதல் கடிதத்தில் அவர் தன் மனைவியை காதலியாக அழைப்பதும் அவளது மனக்கவலையைப் போக்க உள்ள அருமருந்து தமிழ் படிப்பது ஒன்று தான் என்று சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று


இரண்டவாது கடிதம் சிறிய கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குமளவு கூட பொருளாதார வசதியின்றி அவர் சிரமப்பட்டதும் பொருளதவிக்காக எதிர்பார்த்திருந்ததும் வெளிப்படுகிறது. இந்த கடிதத்தில் உதவி கேட்பது தனிமையாக இருக்கும் போது கேட்கவும் என்ற வரி முக்கியமானது. அது போலவே அமரத்தன்மை பெறுக என்று ஆசி தரும் பாங்கும் அற்புதமானது


பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் பாரதியின் சத்தியவாக்குகள். அவரது உள்ளத்தில் இருந்த கோபம் அப்படியே பீறிடுகிறது. பரலி சு. நெல்லையப்பர் சுதந்திர போராட்ட வீரர். 1910ம் ஆண்டு திருவாசகம் நூலை இரண்டனாவிற்கு மலிவுப்பதிப்பாக்கி பல்லாயிரம் பிரதிகள் விற்றவர். பதிப்பு துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். இவரது சகோதர் சண்முக சுந்தரம் பிள்ளை. வ.உ.சியின் நெருங்கிய தோழர். சுதேசி கப்பல்கம்பெனி உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் கண்ணன்பாட்டு, நாட்டுபாட்டை புத்தமாக்கி வெளியிட்டார். லோகோபகாரி என்ற வார இதழை நடத்தியுள்ளார். பாரதி பாடல்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்.


கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் சொற்களும் அதன் உணர்ச்சி வேகமும் கடிதத்தின் வழியாக ஒலிக்கும் அவரது குரலும் தனிச்சிறப்பு கொண்டவை.
இந்த கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் ஜாதி என்ற சொல் இன்று நாம் குறிக்கும் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. வாய்விட்டு இந்த கடிதத்தினை வாசித்து பார்த்த போது அடையும் உணர்ச்சி பெருக்கு அலாதியானது.


**

நன்றி
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP