Oct 13, 2008

விவரணப் படம் - றோயல் கல்லூரி

றோயல் கல்லூரி சம்பந்தமான ஒரு விவரணப்படம்!

Read more...

பாரதி எழுதிய கடிதங்கள்!




கடிதம் -1 - 1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.


(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)

ஒம்
ஸ்ரீகாசி
ஹனுமந்த கட்டம்


எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்


உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி
****


கடிதம் 2 எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919


கடயம்.
30 ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.


இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்


உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக


உனதன்புள்ள
சி. சுப்ரமணிய பாரதி.

( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)


***


கடிதம் 3 பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915


ஒம்
புதுச்சேரி
19 ஜுலை 1915


எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக


தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்


நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை


ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்


தம்பி - நான் ஏது செய்வேனடா


தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது


தம்பி - உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி


உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**


தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது


தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது


தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது


அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது


தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது


ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது


அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது


பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது


பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது


தொழில்கள், தொழில்கள் என்று கூவு


தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.


வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக


முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு


சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு


தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.


உனதன்புள்ள
பாரதி
**
பாரதியாரின் கடிதங்கள் பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவரான ரா. அ. பத்மநாபனால் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கிறது. நான் அடிக்கடி பாரதியின் படைப்புகளை வாசிக்க கூடியவன். மனம் சோர்வுறும் நேரங்களில் பாரதியை வாசித்தால் மிகுந்த உத்வேகம் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தின் வழியே பலமுறை உணர்ந்திருக்கிறேன்.


பாரதியின் கடிதங்கள் மிக அபூர்வமானவை. இந்த கடிதங்களின் அடிநாதமாக அன்றாட வாழ்வின் சிக்கல்களில் உழன்றபடியே தன் பெருங்கனவை சுமந்து கொண்டிருந்த கவியின் பெருவாழ்வு வெளிப்பட்டுள்ளது.


தனது புத்தகங்களை சிறப்பாக பதிப்பிக்கவும், அதை முறையாக விநியோகம் செய்யவும் தமிழ் மொழியின் வளரச்சியை உலகம் அறிய செய்யவும் பாரதிக்கு இருந்த விருப்பங்கள் இந்தக் கடிதங்களில் மிக வலிமையாக வெளிப்பட்டுள்ளது

பாரதியின் இந்த மூன்று கடிதங்களும் மிக முக்கியமானவை. முதல் கடிதத்தில் அவர் தன் மனைவியை காதலியாக அழைப்பதும் அவளது மனக்கவலையைப் போக்க உள்ள அருமருந்து தமிழ் படிப்பது ஒன்று தான் என்று சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று


இரண்டவாது கடிதம் சிறிய கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குமளவு கூட பொருளாதார வசதியின்றி அவர் சிரமப்பட்டதும் பொருளதவிக்காக எதிர்பார்த்திருந்ததும் வெளிப்படுகிறது. இந்த கடிதத்தில் உதவி கேட்பது தனிமையாக இருக்கும் போது கேட்கவும் என்ற வரி முக்கியமானது. அது போலவே அமரத்தன்மை பெறுக என்று ஆசி தரும் பாங்கும் அற்புதமானது


பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் பாரதியின் சத்தியவாக்குகள். அவரது உள்ளத்தில் இருந்த கோபம் அப்படியே பீறிடுகிறது. பரலி சு. நெல்லையப்பர் சுதந்திர போராட்ட வீரர். 1910ம் ஆண்டு திருவாசகம் நூலை இரண்டனாவிற்கு மலிவுப்பதிப்பாக்கி பல்லாயிரம் பிரதிகள் விற்றவர். பதிப்பு துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். இவரது சகோதர் சண்முக சுந்தரம் பிள்ளை. வ.உ.சியின் நெருங்கிய தோழர். சுதேசி கப்பல்கம்பெனி உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் கண்ணன்பாட்டு, நாட்டுபாட்டை புத்தமாக்கி வெளியிட்டார். லோகோபகாரி என்ற வார இதழை நடத்தியுள்ளார். பாரதி பாடல்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்.


கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் சொற்களும் அதன் உணர்ச்சி வேகமும் கடிதத்தின் வழியாக ஒலிக்கும் அவரது குரலும் தனிச்சிறப்பு கொண்டவை.
இந்த கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் ஜாதி என்ற சொல் இன்று நாம் குறிக்கும் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. வாய்விட்டு இந்த கடிதத்தினை வாசித்து பார்த்த போது அடையும் உணர்ச்சி பெருக்கு அலாதியானது.


**

நன்றி
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Read more...

இறுதிக் கடிதம்! - சே குவேரா

சே குவேரா எழுதிய இறுதி மடலின் தமிழ் வடிவம் -

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே.



1965-ம் ஆண்டு மத்தியில், க்யூபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சே ஃபிடலுக்கு எழுதிய கடிதம்.

நன்றி
வி.விமலாதித்தன்

Read more...

16 வயதினிலே…

பதினைந்து தாண்டிப் பறந்தோடும்
பட்டாம் பு+ச்சியாய் - பருவத்தின்
வார்ப்புகளில் கரைதொடும்
அலை நுரைகளாய் அள்ளுண்டு
கால் பதித்த - என்
பதினாறு வயது….!

கற்பனைத் தூரிகைகள் கொண்டு
என் வாழ்க்கை ஓவியங்களை வரைந்துவிட்ட
என் நினைவுப் பக்கங்களை நிரப்பிவிட்ட
அந்த பதினாறு வயதென்ற பனிமழை….
அதில் நனைந்து விட்ட போதும் - இன்றும்
எனக்கு அது கனவு போல….!

இரும்பு உடலின்
உலக்கை உதட்டில் அரும்பிய
பு+னைமுடி மீசையும் - அதை
விரல்களால் நீவிவிட்டு, என் குழந்தைத்
தோழர்கள் நடுவில் கட்டபொம்மன் வீர வசனமுமாய்…
வலம் வந்த அந்த பச்சைமர நாட்கள் - இன்னும் எனக்குள்
மழைநின்றும் மரக்கிளைகள் தூறிய ஒற்றைத்துளிகள்தான்….

பருவத்தின் பிடிகள்தான்
கிளர்ச்சிகளின் உருவம் தான் - இருந்தாலும்
இரவின் மடியில் எழுதிய
கவிதைகள் போல் - இன்னும்
எனக்குள் உயிர்த்து வாழும்
ஒற்றைப்பு+வாய் - என்
16 வயதுக் காதல்…!

இடையிடையே வந்து போகும் பள்ளிப்
பரீட்சைகளின் தோல்விகளும்…
சுட்டுப் போட்டாலும் தட்டுப்படாத - அந்தக்
கணக்குப் பாடமும்….
“பெரிய மனுசன்” நினைப்பில் களவாய்
இழுத்த கட்டுச்சுருட்டின்
புகையிலை வாசமும் - என்
பதினாறு வயதின் இடைச் செருகல்கள்…

இன்று நினைத்தாலும் விழிகள் நிறையும்!
தவறவிடப்பட்ட புகைவண்டியாய்
கையசைக்கும் என் பதினாறு வயதுக் காலங்கள்…
பதினாறு தாண்டி வருடங்கள் போனாலும்
பருவங்கள் மாறிப் புதியவன் ஆனாலும்
என் பழைய மனதும் - அதன்
இளமை நினைப்புக்களும் மட்டும்
தங்கி நிற்கிறது - என்
16 வயதினிலே….!

சு.விஷாகன்

Read more...

Oct 11, 2008

தமிழர் காசுகள்


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறா¢டமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன் நாகா¢கக் காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பொ¢தாகக் காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும. அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன. செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அ¡¢ய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பி¡¢ந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உ¡¢மையை நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர். அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியா¢ன் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும். இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் னெதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

நன்றி
தமிழம்

Read more...

தமிழ் மொழிக்கென ஒரு கோயில்

உலகில் உள்ள மொழிகளிலேயே "தமிழ் மொழி" தான் மூத்த மொழி. பன்னெடுங்காலமாக எழுத்து, ஒலிப்பு முறையில் தொடர்ந்துவருகிற இனிமையான மொழி இது. தமிழ் மொழிக்கென சிறப்பான இலக்கண வகைப்பாடும், இலக்கிய சான்றுகளும், ஏராளமாக உள்ளன.

உலக மொழிகளிலேயே தமிழ் மொழிக்குத்தான் கோயில் உள்ளது. இதனை சா.கணேசன் அவர்கள் காரைக்குடியில் உருவாக்கியுள்ளார்.

காரைக்குடியில் தமிழ் மொழியில் காவியம் படைத்த கம்பனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் கம்பன் விழா நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் மொழிக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் சா.கணேசன் அவர்களது உள்ளத்தில் தோன்றியது. இவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தமிழ்த் தாய்க்கென ஒரு கோவிலை கட்டவேண்டும் என்று எண்ணிய இவர் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தின் தெற்குப் பகுதியில், பொ¢யார் சிலைக்கு அருகில் இந்தக் கோயிலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்த் தாய்கான உருவமும் வடிவமைப்பும் மாமல்லபுர கட்டடக்கலை கல்லூ¡¢யின் முன்னாள் முதல்வரான திருமிகு கணபதி மற்றும் சா.கணேசன் அவர்களின் கருத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமிகு ப.சிதம்பரம் அவர்களது முயற்சியால் இக்கோயில் சிறப்பாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முக்கோண வடிவில் அமைந்த நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் தமிழ்ப் புலவர்களான திருவள்ளுவர், இளங்கோவடிகள் மற்றும் கம்பருக்காக தனித்தனியான பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் நுழைவுப் பகுதியின் இருபுறங்களிலும் ஒலித்தாய் மற்றும் வா¢த்தாயின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் கருவறைப்பகுதி வலது பக்கத்தில் அகத்தியரும், இடது பக்கத்தில் தொல்காப்பியா¢ன் உருவங்களும் உள்ளன.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன், தாமரை மலா¢ன் மீது அமர்ந்திருப்பது போன்று கற்சிலையாக உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தாய் தனது வலது கையில் ஒளிவிளக்கு ஏந்தியும், இடது கையில் வீணையை ஏந்தியும், வலது கீழ்க் கையில் உருத்திராட்ச மாலையை ஏந்தியும், இடது கீழ்க் கையில் ஓலைச்சுவடி ஏந்தியும் காணப்படுகிறது. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்த் தாயின் வளர்ச்சிக்கு உதவியதால், அவர்களது கொடிக்குறியீடான வில், புலி, மீன் சின்னங்கள் தமிழ்த்தாய்ச் சிலையின் தலையைச்சுற்றி அமைந்துள்ளஅரைவட்ட வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தண்டையும், சிலம்பும் தமிழ்த்தாயின் காலை அலங்கா¢க்கும் அணிகலன்களாகக் காணப்படுகின்றன.

தமிழ்த்தாயின் சிலையையும், தமிழ் மொழிக்கான இக்கோவிலை உருவாக்க எண்ணமிட்ட சா.கணேசன் அவர்களது படத்தினையும், இக்கோயில் அமைவிடத்தின் வரைபடத்தையும் கீழுள்ள படத்தில் காணலாம்.



நன்றி
தமிழம்

Read more...

சீனாவில் தமிழ் எழுத்தில் கல்வெட்டுகள்!




சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள், இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கி பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து, சீன நாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மலாக்கா வழியாகத் தென் சீனக் கடலை அடையலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இநதப் பாதை சுற்றுப் பாதையாகும். ஆயிரம் மைல்களுககு அதிகமாகப் பயணதூரம் நீளும். மேலும் பயண நேரத்திலும் பல மாதங்கள் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐநூற்றுவர் எனும் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்செள துறைமுக நகா¢ல் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலையத்தில் நிறுவப் பெற்றுள்ள சிவவிக்ரகம் குப்லாய்கான் என்னும் புகழ் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்கு சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவா¢ன் உடல் நலத்திற்காக இந்த ஆலையம் எழுப்பப்பட்டது. இந்த கோயில் திருக்காதலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலையத்தில் உள்ள சிவன் திருக்காதலீசுவன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.

சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவா¢ன் பெயர் தவச் சக்கரவரத்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பெளர்ணமி அன்று இந்த ஆலையம் நிறுவப்பட்டது.

கி,பி, 1260 ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய சக்கரவர்த்தியான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பீஜிங் நகரை நிர்மாணித்து அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவனுடைய பேரரசு வி¡¢ந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான்.

புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கினான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சியக் காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர. அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இந்நாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பா¢மாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீனச் சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வா¢கள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

நன்றி: -
தமிழம்
தென் ஆசியச் செய்தி இதழ் - திராவிட ராணி இதழ் சூலை 2008

Read more...

Oct 9, 2008

தமிழில் கையெழுத்திட்ட காந்தி...



தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.



திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.

Read more...

தமில்….

தவறு விடவில்லை நான்….
நிச்சயம்…அது…நிச்சயம்!
பக்தியுடனேயே தமிழ் கற்றேன்…
விடுவேனா தவறு…அதில்…

கணணித் தட்டச்சுப் பிழையுமல்ல…
நானறிவேன்… உண்மை!
ஒருமுறைக்கிருமுறை சரி பார்த்ததல்லவா…
வரவே வராது பிழை….

எல்லாம் சரியாயிருக்க…
தமிழ் - தமிலாகிய கதை தானென்ன?
இது இன்றைய யதார்த்தத்தின் விம்பமோ?
இல்லை…இலகுவாக - காலஞ்செய்த கோலமோ?

கேள்விக்கு மேல் கேள்விகள்….
பாவம் நான்… எனக்குப் பதில்தான் தெரியவில்லை…
ஏனெனில் நான் படிக்கும் “சிலபசில்”…
இந்தக் கேள்விக்கெல்லாம் பதிலில்லை…

இதற்குப் பதில் தேட நேரமில்லை என்னிடம்…
நேரமிருந்தும் ஆர்வமில்லைப் பலரிடம்…
ஆனால் சாட்டு மட்டும் உண்டு எம்மிடம்…
“ஒரு “ல” தானே வித்தியாசம்... - எல்லாம் ஒன்றுதான்”

தமிழ், தமிலாகி விட்டால் பரவாயில்லை…
மொழி, பண்பாடு, பற்றி எமக்கென்ன கவலை….
வாயிற்கு வுருவதைப் பேசுவோம் -
மற்றவருக்குப் புரிந்தால் சரி தானே!
நண்பா கவனம்… நாளை இந்தத் தவறுகளால்
உன் “வாழ்க்கை” சில வேளை “வழுக்கை” ஆகிவிடும்!

என்.கே.அஷோக்பரன்

Read more...

இந்தக் காட்டுக்கு ராஜா சிங்கங்கள்தான்……

வெற்றிகொள்ள, வாகைசூடி
பரியேறிப் பறந்த மறவரொப்ப
சயங்கொள்வதற்காய் தமிழன்னையை முடியில் சூடி
களம் காணப் புறப்பட்டோம்……

கைதட்ட வந்தோரும்
களத்திற் பாய வந்தோரும்
எமைக்கண்டு முகவாய் வியர்வை சிந்த,
புதுக்களத்திற் வீரக் குருளைகளாய்ப் புகுந்தோம்…..

சொல் ஒன்று, அதன் பொருள் வேறாய்ப்
பிரித்துப் பேசும்… ஈனம் செய்ததில்லை!
சொல்லாயுதத்தை முதுகில் குத்திப் பழக்கமுமில்லை!
நேரே சென்றோம், மார்பிற் பாய்ந்தோம்…...

செங்களத்திற் சவால் காணப் போய்விட்டோம்,
காயங்களின்றி, தழும்புகளின்றித் திரும்ப முடியுமா?
முதுகிற் குத்தும் கோழையர் தம்மால் - விழுத்தப்பட்டோம்…..
விழுந்து கிடக்கவில்லை, விழுந்ததற்கும் சோ;த்தெழுந்தோம்!

நேருக்கு நேர் வரத்தயங்கும் ஈனக் கோழைகள்
வீரரை இகழ்வது புதியதல்லவே, புதுமையல்லவே!
முதுகிற் பாய்ந்து தாக்கிய நரிகள், சிங்கத்தின்
ஆட்டத்தை அடக்கிவிட்டோம் என ஊளையிட்டனவாம்!

காயம் கண்டு தயங்கும் கோழைகளல்ல….
காயமே கண்டு நடுங்கும் வேங்கைகள் நாம்!
முதுகில் தந்த தழும்புடனே களத்தில் நின்றோம்…
விழுத்தப்பட்டோம் என்ற இகழ்ச்சியைக் கேட்டபடியே வென்றோம்!

தோற்கடிக்கப்பட்ட போது நாம் அழுவதில்லை
வெற்றியடையும் போது நாம் சிரிப்பதுமில்லை
காரணம்… வென்றாலும், தோற்கடிக்கப்பட்டாலும்
சிங்கம், சிங்கம் தான்….ஈன நரி, நரிதான்!

இன்று நாம் என்றும் போல் ராஜாக்களாய்!
முதுகில் குத்திவிட்டு, வீரப் பெருமை பேசிய நரிகள் எங்கே?
நிமிர்ந்தாலும், படுத்தாலும் “இந்தக் காட்டுக்கு”
ராஜா சிங்கங்கள்தான்! என்றுமே நரிகளல்ல….


என்.கே.அஷோக்பரன்

Read more...

Oct 1, 2008

தமிழ் நூலகம் (www.chennailibrary.com)

சென்னை நூலகம் - இணையத்தில் ஒரு தமிழ்க்கடல்!
தமிழ் நூல்களின் இலத்திரனியல் படைப்புக்கள் நிறைந்த மாபெரும் களஞ்சியம். சங்க இலக்கியங்கள் முதல் கல்கி, புதுமைப்பித்தன் என இலவச தமிழ் நூல்கள் இலத்திரனியல் பதிப்புக்களாக நிறைந்து கிடக்கின்றன. தமிழ் இலக்கிய இரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதம் இத்தளம். இதன் மிகப் பெரிய வரப்பிரசாதம் கம்பராமாயணமாகும். முழுமையாக இத்தளத்தில் நீங்கள் கம்பராமாயணத்தையும் கம்பரின் பிற ஆக்கங்களையும் படிக்கும் பாக்கியத்தைப் பெறலாம்!

ஏன் தாமதம் அழுத்துங்கள்...
http://www.chennailibrary.com/

விவாதி ரேட்டிங் : 9.6 / 10

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP