Oct 9, 2008

இந்தக் காட்டுக்கு ராஜா சிங்கங்கள்தான்……

வெற்றிகொள்ள, வாகைசூடி
பரியேறிப் பறந்த மறவரொப்ப
சயங்கொள்வதற்காய் தமிழன்னையை முடியில் சூடி
களம் காணப் புறப்பட்டோம்……

கைதட்ட வந்தோரும்
களத்திற் பாய வந்தோரும்
எமைக்கண்டு முகவாய் வியர்வை சிந்த,
புதுக்களத்திற் வீரக் குருளைகளாய்ப் புகுந்தோம்…..

சொல் ஒன்று, அதன் பொருள் வேறாய்ப்
பிரித்துப் பேசும்… ஈனம் செய்ததில்லை!
சொல்லாயுதத்தை முதுகில் குத்திப் பழக்கமுமில்லை!
நேரே சென்றோம், மார்பிற் பாய்ந்தோம்…...

செங்களத்திற் சவால் காணப் போய்விட்டோம்,
காயங்களின்றி, தழும்புகளின்றித் திரும்ப முடியுமா?
முதுகிற் குத்தும் கோழையர் தம்மால் - விழுத்தப்பட்டோம்…..
விழுந்து கிடக்கவில்லை, விழுந்ததற்கும் சோ;த்தெழுந்தோம்!

நேருக்கு நேர் வரத்தயங்கும் ஈனக் கோழைகள்
வீரரை இகழ்வது புதியதல்லவே, புதுமையல்லவே!
முதுகிற் பாய்ந்து தாக்கிய நரிகள், சிங்கத்தின்
ஆட்டத்தை அடக்கிவிட்டோம் என ஊளையிட்டனவாம்!

காயம் கண்டு தயங்கும் கோழைகளல்ல….
காயமே கண்டு நடுங்கும் வேங்கைகள் நாம்!
முதுகில் தந்த தழும்புடனே களத்தில் நின்றோம்…
விழுத்தப்பட்டோம் என்ற இகழ்ச்சியைக் கேட்டபடியே வென்றோம்!

தோற்கடிக்கப்பட்ட போது நாம் அழுவதில்லை
வெற்றியடையும் போது நாம் சிரிப்பதுமில்லை
காரணம்… வென்றாலும், தோற்கடிக்கப்பட்டாலும்
சிங்கம், சிங்கம் தான்….ஈன நரி, நரிதான்!

இன்று நாம் என்றும் போல் ராஜாக்களாய்!
முதுகில் குத்திவிட்டு, வீரப் பெருமை பேசிய நரிகள் எங்கே?
நிமிர்ந்தாலும், படுத்தாலும் “இந்தக் காட்டுக்கு”
ராஜா சிங்கங்கள்தான்! என்றுமே நரிகளல்ல….


என்.கே.அஷோக்பரன்

1 comments:

waseel October 11, 2008 at 6:29 AM  

அருமை அசொக்பரன் அருமை.........
சொற்சமரின் செல்வர்கள்,,
விவாத அரங்கின் வல்லவர்கள்,,
என்கிறீர்,,மாரும் தட்டிக் கொள்கிறீர்
வாழ்த்துக்கள்...வளர்வதற்கு...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP